Pages

Tuesday 11 June 2013

தமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES

அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” படம் இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான சர்வதேச திரைப்படவிழா ஒன்றில் காண்பிக்கப்படுவதாக இருந்தது.
அந்தத் திரைப்படவிழாவுக்கென்று எனது படத்தின் புதிய பிரதியொன்றை எடுத்துக் கொடுக்க எண்ணிய நான், அந்தத் படத்தின் நெகட்டீவை வெளியே எடுத்தபோதுதான் தெரிந்தது - “வீடு” படத்தின் நெகட்டீவ் முழுவதுமாக கெட்டுப்போய்,மேற்கொண்டு ஒரு பிரதிகூட எடுக்க முடியாத நிலையில் அழிந்துபோய் இருக்கிறதென்று!
அதைப் பார்த்து நிலைகுலைந்துபோன நான் உடனடியாக எனது “சந்தியாராகம்” மற்றும் “மறுபடியும்” ஆகிய படங்களின் நெகட்டீவ்களை எடுத்துப் பார்த்தேன். “வீடு” படத்தின் நெகட்டீவுக்கு ஏற்பட்ட அதே கதிதான்  “சந்தியாராகம்” மற்றும் “மறுபடியும்” ஆகிய இரண்டு படங்களுக்கும் ஏற்பட்டிருந்தது.ஒரு பிரதி கூட எடுக்க முடியாத அளவுக்கு இந்த இரண்டு படங்களின் நெகட்டீவ்களும் கெட்டுப்போயிருந்தன.
எனது மூன்று பிள்ளைகள் என் கண் முன்னேயே இறந்து விட்டது போல ஒரு சோகம் என்னை கவ்விக்கொண்டது.
எனது காலத்திலேயே அழிந்து போன எனது படங்களை நினைத்து நினைத்து நான் கண்ணீர் விட்ட இரவுகள் ஏராளம். அந்த இழப்பு தந்த துக்கத்திலிருந்து இன்று வரை என்னால் வெளியே வர முடியவில்லை.
“வீடு” “சந்தியாராகம்” “மறுபடியும்” ஆகிய எனது படங்களின் அழிவை நினைத்து கொண்டால்... இப்பொழுதும் நெஞ்சு வலிக்கிறது.
நான் இயக்கிய முதற்படமான “கோகிலா” , எனது முதல் தமிழ் படமான “அழியாத கோலங்கள்” , அதன்பின் வந்த “மூடுபனி”, எனக்கும் கமலுக்கும் தேசிய விருது வாங்கித்தந்த - பார்த்த் அனைவர் மனதிலும் இன்று வரை பசுமையாக நியாபகமிருக்கும் எனது “மூன்றாம் பிறை” ஆகிய படங்களின் நெகட்டீவ்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை பார்த்துத் தெரிந்து கொள்வதற்கான தைரியம் எனக்கில்லை. அந்த படங்களின் நெகட்டீவ்களுக்கு எதாவது ஆயிருந்தால், அந்த துக்கத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று பட்டதால் பார்க்கவில்லை. பத்திரமாக இருக்கின்றன என்ற குருட்டு நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்கள் என்று படித்தவர்களாலும்,விமர்சகர்களாலும் ,பாமர ரசிகர்களாலும் ஒரே மனதாக ஒத்துக் கொள்ளப்பட்ட “வீடு” , “சந்தியாராகம்” , “மறுபடியும்” படங்களின் நெகட்டீவ்கள் பாதுகாக்கப்பட்டிருக்க  வேண்டிய முறையில் பாதுகாக்கப்பட்டிருந்தால் அவை அழிந்து போயிருக்காது.
”அழியாத கோலங்கள்”  77-லும், “வீடு” 87-லும் , “மறுபடியும்” 93-லும் வெளியான படங்கள். இந்த படங்களே இனி பிரதியெடுக்க முடியாதபடி அழிந்துபோய் விட்டன என்றால் இவற்றிற்கு முன் வெளிவந்த நமது தமிழ் படங்களின் கதி என்ன? பராசக்தி,ரத்தக்கண்ணீர்,மனிதன்,பாசமலர் போன்ற நமது படங்களின் நெகட்டீவ்கள் எப்படி இருக்கின்றன?
ஏவிஎம் போன்ற பணவசதி படைத்த தனியார் நிறுவனங்கள் சில அவரவர் படங்களை பாதுகாக்க வேண்டிய முறையில் பாதுகாத்து வருவதால், அவர்களது படங்கள் பிழைத்திருக்கின்றன.
சினிமாவில் ஊறித்திளைக்கும் இனம் நம் தமிழினம். நமது மக்களுக்கு அவர்கள் வரவுக்குள் கிடைக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமாதான், நமது மீடியாக்களுக்கு இருக்கும் நிரந்தர பிழைப்புக்கூட சினிமாதான்.
தமிழர்களது அன்றாட வாழ்க்கையிலும் அவர்தம் அரசியலிலும் சினிமா ஏற்படுத்திய - ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கம் அசுரத்தனமானது என்பதில் இரண்டாவது அபிப்ராயம் எவருக்கும் இருக்க முடியாது.
ஒரு சராசரித் தமிழனுக்கு,தமிழச்சிக்கு, இசையென்றால் அது சினிமாப் பாடல்கள்தான். இயல் என்றால் அது நமது சினிமாக்களுக்கு எழுதப்படும் நாடகத்தனம் கொண்ட நமத்துப்போன உரையாடல்கள்தான். கவிதையென்றால் அது நமது சினிமாப்பாடல்களுக்கென்று எழுதப்படும் (இப்பொழுதெல்லாம் அது தமிழ் தானா அல்லது வேறேதேனும் மொழியா என்று தெரியாத) அந்த வரிகள்தான். நடனம் என்றால் அது திரையில் ஆடப்படும் அந்த ஆட்டம் தான்.போடப்படும் அந்த குத்துதான். ஓவியம் என்றால் நமது சினிமாக்களுக்காக வைக்கப்படும் விளம்பர பேனர்கள்தான்.உடையென்றால் அது வெள்ளித்திரையில் நமது நடிக நடிகையர் உடுத்திக்கொள்ளும் அல்லது உடுத்திக்கொள்ளாமல் விடும் அந்த ரக உடைதான்.அன்றாட பேச்சு வழக்கென்றால்,அது நமது படங்களுக்கான கதாபாத்திரங்கள் திரையில் எப்படிப் பேசுகிறார்களோ, அந்தப் பேச்சு வழக்குதான்... (சும்மா அதிருதில்ல...! நண்பேண்டா..!)
அரசியல் என்றால், “வேலைக்காரி” படத்தின் கதை-வசனகர்த்தா அண்ணா அவர்கள் முதல், ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த இன்றைய அம்மா அவர்கள் வரை, தமிழகத்தின் அத்தனை முதல்வர்களும் சினிமாக்காரர்கள்தான்.(இடையில் வந்து போன பன்னீர்செல்வம் அவர்களை ஒரு விபத்து என்று விட்டு விடலாம்) தமிழனது முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகால அரசியலை சினிமாதான் - சினிமாக்காரர்கள்தான் கட்டிக் காத்து (?) வருகிறார்கள்.
இது போதாதென்று, இனி வரும் காலங்களில் கூட அப்படித்தான் என்று திரைத்துறை சார்ந்த சிலர் இங்கு பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மீது சினிமா செலுத்திக்கொண்டிருக்கும் ஆணித்தரமான ஆதிக்கத்தை எடுத்துச் சொல்ல இவைகளை விட வேறு என்ன உதாரணங்கள் வேண்டும்..?
இப்பேர்பட்ட நமது தமிழ் சினிமாவை,அதன் வரலாற்றை,உலகிற்கும், இனி வரும் நமது தமிழ் தலைமுறைகளுக்குமெனப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற எண்ணமோ அக்கறையோ அதற்கான செயல்பாடுகளோ தமிழ் சினிமா மூலம் கோடி கோடியாக லாபம் பார்ப்பதில் மட்டுமே குறியாய் இருக்கும் அதன் பெரியவர்களுக்கோ அல்லது அதன் இதமான இளம் சூட்டில் அரசியல் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அரசியலாளருக்கோ கரிசனை இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகள் கூட திரையரங்கங்களின் இனி பார்க்க முடியாதபடி அழிந்து போய் விட்டன - போய்க்கொண்டிருக்கின்றன.
காலத்திற்கு காலம் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட - ஏற்பட்டுக்கொண்டிருக்கும் - இனியும் ஏற்பட இருக்கும் உள்ளடக்க ரீதியான - உருவ ரீதியான விரும்பத்தக்கது - தகாததுமான மாற்றங்களை ஆராய்ந்து படிக்க எண்ணும் ஆராய்ச்சியாளர்களுக்கு, அழிந்து போன - அழிந்து போகவிடப்பட்ட அந்த படைப்புகள் இனிக் கிடைக்க வாய்ப்பில்லை.
தமிழ் சினிமாவின் அந்த சரித்திர ஆவணங்களில் ஒன்றிரண்டையாவது பார்க்க வேண்டும் என்றால் மஹாராஷ்டிராவில் உள்ள பூனேயில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய திரைப்பட காப்பகத்திற்குத்தான் போக வேண்டும். அல்லது அவற்றின் திருட்டு விசிடிக்கள் தப்பித்தவறி எங்காவது கிடைக்குமா என்று தேட வேண்டும். அல்லது எப்பொழுதாவது காண்பிக்கப்பட்டால், பல விளம்பர இடைவேளைகளோடு அவற்றை நமது தொலைக்காட்சிகளில் தான் பார்க்க முடியும்.
மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய திரைப்படக் காப்பகத்திற்கு தமிழ் சினிமா மீது தனிப்பட்ட அக்கறை எதுவும் கிடையாது என்பதை அறுபதுகளின் நடுப்பகுதியில், நான் பூனே திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அறிவேன்.
நமது படங்கள் நமது காலத்திலேயே அழிந்து போய்விட்டன - அழிந்துபோய்க் கொண்டிருக்கின்றன என்ற துக்கம் காரணம், தமிழ் சினிமா மீதுள்ள தனிப்பட்ட காதல் காரணம்,தமிழ் சினிமா மீதுள்ள தனிப்பட்ட காதல் காரணம் கொதித்துப்போன நிலையில்,  உணர்ச்சிவசப்பட்ட ஒரு பலவீனமான தருணத்தில் எழுதப்பட்ட இந்த கட்டுரையின் சில பகுதிகள் சற்று காட்டமாக அமைந்துவிட்டன.அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நமது தமிழ் படங்கள் நமது காலத்திலேயே அழிந்துபோவதைத் தடுக்க நாம் என்ன செய்யலாம். நமது அரசு என்ன செய்யலாம் என்று சிறிது அக்கறையோடு ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
அந்த வகையில் நமது முதல் தேவை ஒரு தமிழ்த் திரைப்படக் காப்பகம்!
“ஆமா இந்த குப்பைகளைப் பாதுகாத்துவேறு வைக்கவேண்டுமாக்கும்” என்று சிலர் முனுமுனுப்பது என் காதில் விழுகிறது. இந்த அதிருப்தியாளர்களுக்கு ஒன்று சொல்கிறேன். நமது தமிழ் படங்களின் பெரும்பாலானவை குப்பைகள்தான்,ஒத்துக்கொள்கிறேன். அந்த குப்பைகளுக்கிடையில் அவ்வப்போது சில மாணிக்கங்களும் வருகின்றனவே ! அந்த மாணிக்கங்களை நாம் மறந்துவிடக்கூடாது.
அப்புறம், இன்னொரு விஷயம் - குப்பைகள் அதிகமாக இருப்பது நமது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல எல்லா மொழி சினிமாக்களிலும் குப்பைகளே அதிகம்.
தமிழ் சினிமாவுக்கான காப்பகம், அமெரிக்கா, ஃப்ரான்ஸ் , ஜெர்மனி போன்ற நாடுகளின் திரைப்பட காப்பகங்களுக்கு நிகராக அமைக்கப்பட வேண்டும். நமது காப்பகங்களுக்கான பிரதம காப்பாளர் (chief curator) சினிமாவை , குறிப்பாக தமிழ் சினிமாவை ஆழமாக நேசிப்பவராக இருக்க வேண்டும் (A young IAS officer who loves cinema - particularly tamil cinema) அவரையும் அவருக்கு கீழ் பணிபுரிய இருக்கும் இரண்டு,மூன்று இளைஞர்களையாவது , அமெரிக்காவிலோ, ஃப்ரான்ஸிலோ, ஜெர்மனியிலோ இருக்கும் ஒரு அதி நவீன திரைப்படக் காப்பகமொன்றுக்கு குறைந்தது ஆறு மாதங்களாவது திரைப்படப் பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் பயிற்சி அளிக்க வேண்டும்.
தமிழ் திரைப்படக் காப்பகம் அமைவதற்கான ஒரு இடமும் அதற்கான ஒரு கட்டிடமும் வேண்டும். அது சென்னையில்தான் இருக்க வேண்டுமென்றில்லை. ஊட்டி,கொடைக்காணல்,ஏர்காடு போன்ற இடங்களில் கூட இருக்கலாம்.
இதையடுத்து, திரைப்பட காப்பகத்திற்குத் தேவையான , ஒரு நவீன திரையரங்கம் உட்பட, அனைத்து உபகரணங்களும் (equipments) வாங்கப்படவேண்டும்.
தமிழில் தயாராகும் ஒவ்வொரு திரைப்படத்தின் நெகட்டீவ் பிரதியொன்றும் (duplicate negative copy), அதன் மின்பதிப்பொன்றும் (digital version of it) தமிழ்த் திரைப்படக் காப்பகத்தில் வைக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரைக் கேட்டுக்கொள்ளலாம். அல்லது சட்டம் மூலம் கட்டாயப் படுத்தலாம்.
பழைய தமிழ் படங்களின் நெகட்டீவ்களையோ அல்லது பிரதிகளையோ தேடியெடுத்து அவற்றை புதுப்பிக்கும் நவீன முறைகளை கையாண்டு புதுப்பித்து வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் திரைப்பட காப்பகத்திற்கான ஆரம்ப செலவுகள் அனைத்தையும் தமிழ் திரைப்படத்துறையினர் (தயாரிப்பாளர்கள், நடிக நடிகையர்,இசையமைப்பாளர்கள் மற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள்) பாதி, அரசு பாதி என்று ஏற்றுக்கொண்டு செயல்படலாம்.
நமது தமிழ் திரைப்படங்கள் நமக்குப் பின் வரும் சந்ததியினருக்குக் கிடைக்க வேண்டுமென்றால், தமிழ் திரைப்பட துறையை சார்ந்த நலமும், நமது அரசும் சேர்ந்து உடனடியாக தமிழ் திரைப்படக் காப்பகத்திற்கான வேலையில் இறங்கினால்தான் உண்டு.இல்லையெனில், நமது காலத்திலேயே நமது தமிழ்ப் படங்கள் அழிந்து போய்விடும். தமிழன் என்ற வகையில் ,தமிழ் சினிமாவை நெஞ்சார நேசிப்பவன் என்ற வகையில், தமிழ்த் திரைத் துறையினரே, தமிழக அரசே உங்கள் கால்களில் என் தலை வைத்து வணங்கி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து நமக்கான தமிழ்த் திரைப்பட காப்பகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுங்கள்- உடனடியாக அந்தப் பணியில் இறங்குங்கள்!

-பாலுமகேந்திரா


Sunday 21 April 2013


முள்ளும் மலரும் படத்தில் நான்
பாலு மகேந்திரா
பூனே திரைப்பட கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் என் மூன்று வருட படிப்பை 1969-ல் முடித்துக் கொள்கிறேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்க்காமலே 1971-ல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் நெல்லு”   இது மலையாளப்படம். இதன் இயக்குனர் ராமு கரியத். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைக்கிறது. 71 -முதல் 75 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறேன்.

பெரும்பாலனவை மலையாளப் படங்கள். இந்த ஐந்து வருடங்ளுக்குள்  மூன்று தடவைகள் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்கு தரப்படுகிறது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆந்திர அரசின் விருதும் இரண்டு தடவைகள் என்னை வந்தடைகிறது. ஐந்து வருடங்களில் 21-படங்ளுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு 1976-ல் எனது இயக்கத்தில் வந்த முதல் படமான கோகிலா-வைத் தொடங்குகிறேன். கோகிலாவின் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத் தொகுப்பு ஆகியவற்றை நானே செய்கிறேன். கோகிலா கன்னட மொழிப் படம். கமலஹாசன், ஷோபா மற்றும் ரோஜாரமணி ஆகியோர் இதில் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாகிய மோகன் என்ற கன்னட இளைஞரை  இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அறிமுகப்படுத்துகிறேன். அப்பொழுது மோகன் பங்களூர் வங்கி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இந்தப் படத்தின் இசை இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான சலீல் செளத்ரி. கோகிலா படத்தின் மூலம் சிறந்த திரைக்கதையாளருக்கான கர்னாடக அரசின் விருதும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் எனக்குக் கிடைக்கிறது. கோகிலா கன்னட மொழியிலேயே சென்னையில் 150-நாட்கள் ஓடிச் சாதனை படைக்கிறது. கோகிலாவை அடுத்து நான் ஒரு தமிழ்ப் படம் செய்ய விரும்பினேன். என் இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப் படத்தில் எனது பால்யத்தை பதிவு பண்ணுவதென்று முடிவு பண்ணுகிறேன். என் நெஞ்சில் பசுமையாக  இருந்த ஞாபகங்கள் என்பதால் எனது முதல் தமிழ் படத்துக்கு அழியாத கோலங்கள் என்று பெயர் வைத்து  படத்திற்கான ஆரம்ப வேலைகளிலும் இறங்குகிறேன். இந்த சமயத்தில்தான் மகேந்திரன் என்ற இளைஞர் என்னை அணுகி அவர் இயக்க இருக்கும் அவரது முதல் படத்திற்க்கு நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று என்னைக் கேட்கிறார்.  இந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று எனது நண்பர் கமலும் விரும்பினார். கல்கியில் வெளிவந்த உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலைத் தான் மகேந்திரன் படமாக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.

அந்த நாவலை கல்கியில் வெளியானபோதே நான் படித்திருந்தேன். அண்ணன் தங்கை உறவை உணர்வு பூர்வமாகச் சொன்ன நல்ல நாவல். இந்தக் கதையில் வரும் அண்ணனாக நண்பர் ரஜினிகாந்தும், அவரது தங்கையாக எனது ஷோபாவும் நடிப்பதென்று முடிவாகிறது.

கோகிலாவைத் தொடர்ந்து நான் எடுக்க இருந்த எனது முதல் தமிழ் படத்திலும் ஷோபா இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அந்தப் படம் பதின்வயதுகளின் முற்பகுதியில் இருக்கும் மூன்று விடலைப் பையன்களைப் பற்றிய படம்.  அந்த மூன்று விடலைகளும்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். ஷோபாவுக்கு அழியாத கோலங்கள் படத்தில் ஸ்கூல் டீச்சராக ஒரு சிறிய ரோல்தான் வைத்திருந்தேன். ஆனால் முள்ளும் மலரும் படத்தில் அவளுக்கு முக்கியமான ரோல். அதுவும் ரஜினிகாந்த் என்ற பெரிய நடிகருடன். எனது ஒளிப்பதிவில் ரஜினி தங்கையாக  அவள் தமிழில் அறிமுகமாவதே நல்லது என்றுபடுகிறது.
எனவே எனது அழியாத கோலங்கள் படத்தை தள்ளிப் போடுகிறேன். மகேந்திரன் இயக்கத்திலான முள்ளும் மலரும் படத்தில் முழுமையாக ஈடுபடுகிறேன். மகேந்திரனுக்கு இது முதல் படம். வசனகர்த்தாவான அவர் அதற்குமுன் உதவி இயக்குனராகப் பணியாற்றியோ அல்லது ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றோ திரைப்பட இயக்கத்தைக் கற்றவரல்ல. எனவே அவரது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற வகையில் எனது பொறுப்பு, (Responsibility)  மிக அதிகமானது. ஒரு பத்தின் ஒளிப்பதிவாளர் என்ற எல்லைக்குள் இருந்துகொண்டே முள்ளும் மலரும்  த்தின் திரைக்கதை அமைப்பிலும் உரையாடலிலும் திரைப்பட இயக்கத்திற்கு உட்பட்ட லென்சிங், ஷாட் டிவிஷன்ஸ், கெமராக்  கோங்கள் தேர்வுசெய்வது, நடிகர்களைக் கதாபத்திரங்களாக மாற்றுவது போன்ற அனைத்து பணிகளிலும் நான் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திகொள்கிறேன். படப்பிடிப்பின் பின் படத் தொகுப்பிலும் நான் கூடவே இருக்கிறேன்.
இந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் உணர்ந்திருப்பீர்கள்.

முள்ளும் மலரும் படம் 1978- ஆகஸ்ட்15-ம் திகதி வெளியாகிறது.  முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி. எனது முதல் தமிழ்ப் படமான அழியாத கோலங்கள் 79-ல் தான் வெளியானது. முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உண்ர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார். செந்தாழம் பூவில் என்ற
அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்துகொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது...

இந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப் பட்டிருந்து. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மொண்டாஜ் (Montage) உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு பட்து. இதை மகேந்திரனிடம்  சொன்னேன் அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குதான் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம்.
1976-ல் எனது முதல் படமான கோகிலாவில் நான் ஆரம்பித்த இந்த லவ் மொண்டாஜ் என்ற உத்தியை இன்றய இளம் இயக்குனர்கள் பலர் அழகாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்.கதையின் நகர்வு, கதாபாத்திரங்ளின் தோற்றம் அவர்களின்  உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள், படத்தின் ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு போன்ற அத்தனை விஷயங்களிலும் யதார்த்தம், இயல்புதன்மை என்று பார்த்து பார்த்துச் செய்துவிட்டு பாடல் காட்சிகளில் இந்த யதார்த்தத்தை, இந்த இயல்புதன்மையை நாம் பண்டு முதல் கோட்டை விட்டே வந்திருக்கிறோம். தாலாட்டையும், ஒப்பாரியையும், மேடைப் பாடலையும்   இன்னும் இரண்டொரு பாடல் சந்தர்ப்பங்களையும் தவிர பெரும்பாலான பாடல் காட்சிகள் இயல்பு தன்மைக்கு புறம்பானவை. அபத்தமானவை என்பது நமக்குத் தெரியும்.

முள்ளும் மலரும்  படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குனர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு. எனது ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு செட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி ..என  முள்ளும் மலரும் படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும். ஆனால் ஒன்று.. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில்  முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு. எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல! 

Thursday 6 December 2012

ஷோபா என்றொரு தேவதை


06-dec-2012
வியாழன்

        “ சண்டே இண்டியன் பத்திரிக்கைக்கு ஷோபா பற்றி  ஒரு கட்டுரை எழுத வேண்டும். கேட்டது சுந்தர புத்தன். புத்தன் எனது நண்பர். நான் மதிக்கும் எழுத்தாளர். கட்டுரை ஷோபா பற்றியது. உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

         இது இருபது நாட்களுக்கு மேலாகிவிட்டது. கட்டுரை இன்னும் கைகூடவில்லை.புத்தன் நேற்று வந்திருந்தார். கட்டுரை பற்றி விசாரித்தார். இன்னும் இரண்டு நாளில் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன்.

         ஷோபா பற்றி எழுத உட்கார்ந்த ஒவ்வொரு தடவையும் உணர்ச்சிவசப்பட்டு அழுதேனே தவிர ஒரு வரி எழுதமுடியவில்லை.

         இன்று மறுபடியும் எழுத உட்காருகிறேன்.ஞாபகங்கள் மீண்டும் கண்ணை நனைக்கின்றன. எழுந்து முகம் அலம்பிவிட்டு எழுதத் தொடங்குகிறேன்.

        தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது?

        அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா       ஒரு அற்புதமான நடிகை என்பதையா... நடிப்பில் மிகுந்த
 தனித்தன்மையையும் தனக்கே தனக்கென்று நிறையப்  பிரத்தியேகதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா...

         குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசோடு சதா வியப்பும் பிரமிப்புமாக பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா...?

        அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தையா..?

   எதை?  எதை எழுதுவது?

         மிக அடர்த்தியான உணர்வுகள் முட்டி மோதும் சமயங்களில் வார்த்தைகள் காணாமல் போய் விடுகின்றன. நாம் தலையில் வைத்து கொண்டாடும் நமது தமிழ் நம்மை “அம்போ என்று விட்டு விலகிக்கொள்கிறது.

         அந்த மனநிலையில் எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன்.

         ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார். அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன்.

       அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது. அதில் ஒரு கேள்வி:
       மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே... எப்படி இது...?

ஷோபா சொல்லியிருந்த பதில்:

      “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இது தான் காரணம்.

        எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது.

       தேவலோக வாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா.

       ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம்.

       அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான   உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். “மூன்றாம் பிறை படம் மூலமாக.

        மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.!

        நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன்.

        ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு........

எனக்கு......

       எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்...!

நன்றி “சன்டே இண்டியன்.

Thursday 11 October 2012

சினிமாவும் பால் வியாபரமும் ...



11-oct-2012
வியாழன்


             கன்றுக் குட்டிக்கான பாலைக் கறந்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருவன் நினைத்த மாத்திரத்திலேயே அவன்
வியாபாரியாகிறான். இதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

               அதுபோல, தன் குடும்பத்துக்கு செலவு செய்ய வேண்டிய பணத்தை
சினிமாவில் போட்டு லாபம் பார்க்கலாம் என்று நினைத்த மாத்திரத்திலேயே
ஒருவன் வியாபாரியாகிறான். அந்த வகையில் சினிமாத் தயாரிப்பாளர்கள்
அனைவருமே வியாபாரிகள் தான். இதில் விதிவிலக்கெல்லாம் கிடையாது.

            தான் விற்பனை செய்யும் பாலில், ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கலப்பதில்லை என்ற திடசங்கல்பத்தில் ஒரு பால் வியாபாரி.
லிட்டருக்கு 250 மில்லி தண்ணீர் என்ற எண்ணத்தில் இன்னுமொரு பால் வியாபாரி. லிட்டருக்குப் பாதிக்குப் பாதி தண்ணீர் என்ற முடிவில்
மூன்றாவது வியாபாரி.

            அவனவன் மனனிலைக்கு - attitude -க்கு ஏற்ப அல்லது பணம் பண்ணும் ஆசைக்கு ஏற்ப பால் சுத்தமாக அல்லது கலப்படமாக நமக்குக்
கிடைக்கிறது.

            சினிமா வியாபாரமும் அப்படித்தான்.

           தயாரிப்பாளரும் இயக்குனர்களும் அவரவர் மனனிலைக்கேற்ப சமரசங்கள்- compromises செய்துகொள்கிறார்கள். தரமான தூய சினிமா
மட்டுமே தருவேன் என்று ஒரு தயாரிப்பாளர், அல்லது இயக்குனர். நல்ல படம் தருவேன் ஆனால் வியாபாரம் கருதி அதில் கொஞ்சம் " ஐட்டங்களும் " வைப்பேன் என்ற மனநிலையில் இன்னுமொரு தயாரிப்பாளர் அல்லது இயக்குனர்.

           படம் எடுப்பேன், ஆனால் அது வியாபார நோக்கத்தில் மட்டுமே! எனவே எனது படத்தில் " விலைபோகக்கூடிய " அம்சங்கள் நிறைய இருக்கும் என்ற முடிவுடன் மூன்றாவது தயாரிப்பாளர்.

           இப்படியாக பால் வியாபாரம் செய்ய வருபவரின் நோக்கத்தைப் பொறுத்து, பாலின் தரம் அமைவதைப் போல, படம் எடுக்க வருபவரின்
நோக்கத்தைப் பொறுத்தே படத்தின் தரம் அமையும். தரமான -கலப்படமில்லாத பாலை மட்டும் தான் வாங்குவோம் என்று பால் வாங்குபவர்கள் முடிவு செய்தால், கலப்படம் செய்து பால் விற்கும் வியாபாரிகள் காலக் கிரமத்தில் குறையத் தொடங்குவார்கள். இது எனது நப்பாசை - wishful thinking!

          இது நடக்கிற காரியமில்லை என்பது எனக்குத் தெரியும்.....!

          சினிமா கற்றுக் கொள்ள பூனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த 1966 முதல் இன்று வரை, கிட்டத்தட்ட 46- ஆண்டுகளில் எந்த வித வணிக சமரசங்களும் இல்லாமல் இரண்டே இரண்டு படங்களை மட்டும் தான் என்னால் கொடுக்க முடிந்தது. "வீடு", "சந்தியாராகம்" என்ற இரண்டு படங்கள் தான் அவை. எனது மற்ற படங்கள் எல்லாமே பாடல் காட்சிகள் போன்ற சில வணிக சமரசங்களுடன் பண்ணப்பட்ட படங்கள் தான். ஆனால் அவற்றில் பல படங்கள் நல்ல படங்கள் என்று இன்று வரை மக்களால் கொண்டாடப்படும் படங்களாகவும், அதே சமயம் 200 நாட்களுக்குமேல் ஓடி வசூல் சாதனை புரிந்த படங்களாகவும் அமைந்து போனது என் அதிர்ஷ்டம்!

          பெரிய திரையை விட சின்னத்திரையில் தான் "படைப்புச் சுதந்திரம்"- creativity freedom எனக்கு அதிகம் கிடைத்தது. 1999 செப்டம்பர் முதல் 2000 செப்டம்பர் வரை சன் தொலைக்காட்சிக்காக நான் செய்த "கதை நேரம்" குறும்படங்கள் படைப்பாளி என்ற வகையில் எனக்கு மிகவும் திருப்தியான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு புதன் கிழமையும் ஒரு குறும்படம் என்ற வகையில் 52 குறும்படங்கள் செய்தேன். இந்த 52-ல் ஒரு 20-25 குறும்படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது எனது கணிப்பு. ஆங்கில அடியெழுத்துக்களுடன்  (with subtitles) இவற்றை எந்த நாட்டிலும் திரையிடலாம். அப்படியொரு உலகளாவிய தன்மை அமைந்து போன குறும்படங்கள் அவை. தொலைக்காட்சியில் அவை காண்பிக்கப்பட்டும் 12-15 வருடங்களாகின்றன. இன்னும் மக்கள் அந்தக் குறும்படங்கள் பற்றிச் சிலாகிக்கின்றனர். "கதை நேரம்" குறும்படங்கள், பல கல்லூரிகளிலும் திரைப்படப் பள்ளிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்று அறிகிறேன். ரொம்ப சந்தோஷம்.

Wednesday 3 October 2012

ஜெயகாந்தன் என்ற ஆளுமையும் நானும்....


03- oct- 2012
புதன்


                  அவன் மூக்கிற்கும், மேல் உதட்டிற்கும் இடையே உள்ள பகுதியிலும் அவன் பிறப்புறுப்புக்குத் தொட்டடுத்த மேல் பகுதியிலும், புழுதி படிந்தாற் போல பொன்னிற ரோமங்கள் வளரத் தொடங்கியிருந்த காலம்...

                அம்புலிமாமாவிலிருந்து, அகிலன், கல்கி, மு.வரதராசன்,
நா.பார்த்தசாரதி, எஸ்.கணேசலிங்கம், டொமினிக் ஜீவா, லட்சுமி, சூடாமணி,
என அவன் வாசிப்பு வளரத் தொடங்கியிருந்த காலம்...

                "முத்திரைக்கதை" முக்கியத்துவத்துடன் ஜெயகாந்தன் என்ற இளம் எழுத்தாளரை ஆனந்த விகடன் பிரபலப் படுத்திக் கொண்டிருந்த காலமும் அதுதான்...

              அவன் அப்பாதான் ஜெயகாந்தனை அவனுக்கு  அறிமுகப் படுத்தியிருந்தார்.  விகடனில் அவன் படித்த முதல் ஜெயகாந்தன் கதை
"துர்கா". அந்தக் கதை அவனை மிரட்டியிருந்தது. இதுவரை ஏற்படாத வாசிப்பு அனுபவம் அது. அந்தக் கதை அவனுள் ஏற்படுத்திய தாக்கத்தையும்,
அதிர்வுகளையும் அன்று சாயந்தரம் ஆற்றங்கரையில் உட்கார்ந்து அவன் அப்பாவோடு பேசும்போது அவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்
என்று முடிவு பன்னியிருந்தான். அதுகாரணம், சாயந்தரம் அப்பாவோடு ஆற்றங்கரைக்குப் போகும்போது துர்கா வந்திருந்த விகடனையும்
எடுத்துப் போயிருந்தான்.

              அவன் கையில் விகடனைப் பார்த்ததும் அப்பா புரிந்து கொண்டார். அவனிடமிருந்து பத்திரிகையை வாங்கிய அவர், அதில் வந்திருந்த
 ஜெயகாந்தன் கதையை நிதானமாகப் படிக்கத் தொடங்கினார். அவருக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த அவன் அப்பா படிக்கப் படிக்க அவர் முகத்தில்
ஏற்படும் பலதரப்பட்ட பாவமாற்றங்களை உன்னிப்பாக அவதானித்தும், ரசித்தும் கொண்டிருந்தான். படித்து முடித்ததும் அப்பா அவனைப்
பார்த்து ஆங்கிலத்தில் சொன்னார்... " This guy is brilliant!".

             அவன் கிராமத்திற்குச் சற்றுத் தொலைவில், கடலுடன் கலக்கும் அமிர்தகழி ஆற்றங்கரையின் கட்டில் அமர்ந்து, தொங்க விட்ட கால்
நீரில் நனைய, காலிலுள்ள புண்களை மீன்கள் கொத்தக் கொத்த அப்பாவோடு இலக்கியம் பேசுவது, சினிமா பேசுவது, வாழ்க்கை பேசுவது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவன் அப்பா ஒரு தேர்ந்த ரசிகர். வாழ்க்கையின் ஒவ்வொரு க்ஷணத்தையும் உணர்ந்து, ரசித்து வாழ்ந்தவர். அவர் ஒரு கணிதப் பேராசிரியராக இருந்தும், தமிழிலும், சமஸ்கிருதத்திலும், அறிவியலிலும் மிக்க பாண்டித்தியம் உள்ளவர்.

               அவனுடைய மிக நெருங்கிய நண்பன் என்றால், அது அவன் அப்பாதான். அப்பாவும் அவனும் பகிர்ந்துகொள்ளாத விஷயங்களே இல்லை. சுத்தானந்த அடிகளார் முதல் சுய இன்பம் வரை. கம்பர் முதல் காளிதாசன் வரை. அவன் பால்ய சினேகிதி அன்னலட்சுமி முதல் அவ்வையார் வரை எல்லாவற்றையும் பற்றி அவன் அப்பா அவனோடு பேசுவார். அப்படியொரு அப்பா அவனுக்கு வாய்த்தது பற்றி இப்பொழுதும் அவன்  பெருமைப்படுவதுண்டு. அவன் இன்றுள்ள இவனாக இருப்பதற்கு அவன் அப்பா ஒரு மிகப்பெரிய காரணி. அன்று படித்த ஜெயகாந்தன் கதையை முன் வைத்து அப்பா இலக்கிய ரசனையின் பல நுணுக்கங்களை அவனுக்கு அன்று சொல்லிக் கொடுத்தார்.

             அந்தக் கதையின் உள்ளடக்க அடர்த்தி.... அதில் சொல்லப்பட்டிருந்த முற்போக்கான கருத்து... கதாப்பாத்திரப் படைப்பு... கதைக்களம்,
கதை நெடுகிலும் விரவிக் கிடந்த காட்சி வடிவ அழகு, அப்புறம் அந்தக் கதையைச் சொல்லும் பொழுது ஜெயகாந்தனுக்குக் கைகூடியிருந்த
உள்ளடக்கத்திற்குப் பொருத்தமான உருவ அமைப்பு.... ஜெயகாந்தனின் சொற்த்தேர்வு, அவர் வாக்கிய அமைப்பின் தனித்தன்மை, நடையின்
லாவகம், மொழி ஆளுமை.. இப்படி ஜெயகாந்தன் கதையை முன்வைத்து, இலக்கிய ரசனை பற்றி நிறைய விஷயங்களை அப்பா அன்று  பேசியிருந்தார்.

                அடுத்த வாரம் ஜெயகாந்தன் கதை வர இருக்கிறதென்றால், அதை முதல் வாரமே விகடனில் அறிவித்து விடுவார்கள்.

                சென்னையில் பிரசுரமாகும் விகடன், ரயில் மூலம் ராமேஸ்வரம் போய், ராமேஸ்வரத்திலிருந்து கப்பலில் கடல்கடந்து தலைமன்னார் சென்று தலைமன்னாரிலிருந்து, இலங்கையின் தலைநகரான கொழும்பிற்குப்போய், கொழும்பிலிருந்து மீண்டும் ரயிலில் அவனது ஊரான மட்டக்களப்பிற்கு அனுப்பப்பட்டு, மட்டக்களப்பிலிருந்து அவனது கிராமமான அமிர்தகழிக்கு பஸ்ஸில் வந்து சேர, பிரசுரமான தேதியிலிருந்து பத்துப் பன்னிரண்டு நாட்களாகும்...

              ஜெயகாந்தன் கதை அவன் கிராமத்திற்கு வந்து சேரும் வரை காத்திருக்க அவனுக்குப் பொறுமையில்லை. அவன் வட்டாரத்திலுள்ள  வேறு எவனும் படிப்பதற்குமுன் ஜெயகாந்தன் கதையை அவன் படித்தாக வேண்டும் என்ற பிடிவாதம் அவனுக்கு.

             கொழும்பிலிருந்து விகடனைச் சுமந்து வரும் ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்குக் காலை ஐந்தரை மணிக்கு வந்து சேரும். ஐந்தரை மணிக்கு ரயில் நிலையத்தில் இருக்க வேண்டுமென்றால், அதிகாலை நாலு மணிக்கு அவன் எழுந்திருக்க வேண்டும். நாலு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, அது போதாதென்று அவன் அம்மாவிடமும் எழுப்பிவிடு என்று சொல்லிவிட்டுப் படுத்துக் கொள்வான். காலையில் ஜெயகாந்தன் கதை படிக்கப் போகிறான் என்ற குஷியில் அவனுக்கு இரவெல்லாம் தூக்கம் வராது. ரொம்பநேரம் வரை அதைப்பற்றி யோசித்தபடியே உழன்றுவிட்டு இரண்டுமணிக்கு மேல் அசதி காரணம் கண்ணயர்ந்த சில நிமிடங்களுக்குள் அலாரம் அடிக்கும். கூடவே அம்மாவும் எழுப்பி விடுவாள். அவசரமாக எழுந்து குளித்து ரெடியாகிவிடுவான். ஐந்தரைக்கு முன்பே ரயில் நிலையத்தில் இருப்பான். ஐந்தரைக்கு ரயில் வரும். மட்டக்களப்பிற்கான பத்திரிகைக் கட்டுகள் இறக்கப்பட்டு பிரிக்கப்பட்டு அதிலிருந்து நான்கு விகடன் பிரதிகள் ரயில் நிலைய டீக்கடைக்குக் கொடுக்கப்படும். அந்த நான்கு பிரதிகளில் ஒன்றை அவன் வாங்கிக் கொள்வான். வாங்கின கையோடு ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்து  ஜெயகாந்தன் முத்திரைக்கதையைப் படித்து முடிப்பான். அந்த ரயில் நிலைய சத்தங்களுக்கிடையில், காலைக் குளிர்காற்றில் ஜெயகாந்தன் கதை
படிப்பது தான் எத்தனை இனிய அனுபவம்! அவன் படித்து முடிப்பதற்கும் ஸ்டேஷன் டீக்கடைக்காரர் ஆவிபறக்கும் டீ டம்ளரை அவனருகே
வைத்து " குடி" என்று சொல்வதற்கும் சரியாக இருக்கும். ஸ்டேஷன் டீக்கடையின் அந்த நேரத்து டீ அமிர்தம். ரசித்துக் குடித்துவிட்டு
சைக்கிள் எடுப்பான். வீடு போவதற்கான நேரத்தை வேண்டுமென்றே நீட்டுவான். படித்த ஜெயகாந்தன் கதை வழிநெடுகிலும் அவன் மனத்திரையில்
வரிக்கு வரி காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும்..

                 அதெல்லாம் ஒரு காலம்.... அந்த வயசும், அவன் வளர்ந்த சூழலும், அவன் அப்பாவின் ஊக்கமும், அவனது கிராமத்து நண்பர்களின்
இலக்கிய ஆர்வமும், அயல் வீட்டு அன்னலட்சுமியின் காதலும், ஓ... எத்தனை இனிமை... விடலைப் பருவத்தின் வியப்பு மிகுந்த அந்தக் காலம் இனி திரும்பி வருமா...?

      அதை இப்பொழுது நினைத்துப் பார்க்கையில், அதை இழந்துவிட்டோம் என்ற வருத்தம் அவனுக்கில்லை... மாறாக அப்படியொரு காலம் அவனுக்குச் சொந்தமாக இருந்ததே என்ற பெருமிதம் தான் அவனுக்கு.

     அதுசரி, மீசை கறுக்காத அந்த விடலை - அந்த ஜெயகாந்தன் பைத்தியம் யார் என்று இன்னும் சொல்லவில்லையே... அவன் பெயர் மகேந்திரா. அப்பா பெயர் பாலநாதன். அவரது நண்பர்கள் அப்பாவை பாலு பாலு என்று அழைப்பார்கள். அதனால் வெறும் மகேந்திராவாக இருந்த அவன் பிற்காலத்தில் பாலுமகேந்திரா என அழைக்கப்பட்டான்.. மன்னிக்கவும் அழைக்கப்படுகிறான்!  


Wednesday 19 September 2012

இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -2


19.SEPT.2012
புதன்


                   எனது மூடுபனி படத்திலிருந்துதான் நான் இளையராஜாவுடன் பணியாற்றத் தொடங்கினேன் என்று சொல்லியிருந்தேன். மூடுபனி
எனக்கு மூன்றாவது படம். ஆனால் இசைஞானிக்கோ அது நூறாவது படம். என்றும் சொல்லியிருந்தேன். மூடுபனி ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்.

                 எனது மானசீக ஆசான்களில் ஒருவரான ஆல்ஃபிரெட் ஹிச்காக் என்ற மாமேதைக்கு மரியாதை செலுத்தும் முகமாகத் தமிழில் நான் எடுத்த சஸ்பென்ஸ் திரில்லர். எனது ஷோபாவும் அழியாத கோலங்களில் நான் அறிமுகப்படுத்திய பிரதாப் போத்தனும் சேர்ந்து அற்புதமாக நடித்திருந்த படம். எனது இயக்கத்தில் வந்த முதற் படமான கோகிலாவில் மோகன் என்ற வங்கி ஊழியரை நான் நடிகராக அறிமுகப்படுத்தியிருந்தேன். கன்னடிகரான அவரை எனது மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்துவைத்தேன்.பிற்காலத்தில் தமிழ்த் திரை வானில் அவர் ஜொலிக்கும் நட்சத்திரமாகத் திகழ்ந்தது சந்தோஷம்.

                மூடுபனி படத்திற்கு முன்பும் அதன் பின்புமாக யேசுதாஸ் பல நூறு பாடல்களைப் பாடியிருக்கிறார். இருப்பினும்,தனக்கு மிகவும் பிடித்த சினிமாப் பாடல் என்று இன்றுவரை அவர் சொல்லிக்கொண்டிருப்பது மூடுபனி படத்தில் வந்த ' என் இனிய பொன் நிலாவே ' பாடல் தான்.

                71 முதல் 76 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளனாக மட்டும் பணியாற்றிவிட்டு 76-ல் நான் திரைப்பட இயக்கத்தில் ஈடுபடுகிறேன். நான் இயக்கிய முதல் படம் கோகிலா. கன்னடப் படம். நான் இயக்கும் படங்களின் திரைக்கதை, ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றையும் நானே செய்வது வழக்கம். எனது முதற்படமான கோகிலாவிலிருந்து கடைசியாக வெளிவந்த அது ஒரு கனாக்காலம் வரை அப்படித்தான். நான் இயக்கும் படங்களுக்கான இசை, குறிப்பாக பின்னணி இசை எங்கு தொடங்கி எங்கு முடிய வேண்டும், அது எப்படிப்பட்ட இசையாக இருக்கவேண்டும் என்பவற்றில் நான் வெகு உன்னிப்பாக இருப்பேன். இவற்றையெல்லாம் அந்தந்தப் படங்களுக்கான திரைக்கதைகளை எழுதும்போதே நான் தீர்மானித்துக் கொள்வேன்.

                  படத்தொகுப்பு முற்றிலுமாக முடிந்து, அடுத்த கட்டமான இசைச் சேர்க்கைக்குத் தயாரானதும், அந்தப் படத்திற்கான இசை பற்றிய எனது எண்ணங்களை எனது இசையமைப்பாளருக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துவேன். எனது படங்களில் பிரக்ஞைப்பூர்வமாக நான் வைக்கும் மௌனங்களை, உணர்வு பொதிந்த, அர்த்தமுள்ள அந்த மௌனங்களை இசைகொண்டு கலைக்க வேண்டாம் என்றும் என் இசையமைப்பாளரிடம் நான் கேட்டுக் கொள்வேன்.

                   நான் இயக்கிய முதல் இரண்டு படங்களுக்கும் இசை அமைத்த இந்தியத் திரையிசையின் மாமேதைகளில் ஒருவரான சலீல் சௌத்ரி அவர்களிடமும் அந்தப் படங்களுக்கான இசை பற்றிய எனது எண்ணங்களைத் தெரியப்படுத்தியே அவற்றிற்கான இசையைப் பெற்றுக்கொண்டேன்.

                   மூடுபனி படத்தின் இசைச் சேர்க்கைக்கு முன், அதற்கான இசை எப்படி இருக்கவேண்டும் என்ற எனது எண்ணங்களை இளையராஜாவுக்கு மிக நுணுக்கமாகத் தெரியப்படுத்தியிருந்தேன்.

                      எனது மூன்றாவது படமான மூடுபனி இளையராஜாவுக்கு நூறாவது படம். மூடுபனிக்கு முன் 99 படங்களுக்கு இசையமைத்து வெற்றியின் உச்சத்தில் அவர் இருந்த காலம் அது. இசைஞானியுடன் பணியாற்றத் தொடங்கிய அந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள் ராஜா என்னிடம் கேட்டார்.

                     " ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது? "

                   என்ன மன நிலையில் அந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது என்பதை உடனடியாக நான் புரிந்துகொண்டேன். இசை அமைப்பதில் அதுவரை அவர் அனுபவித்து வந்த படைப்புச் சுதந்திரத்திற்குள் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற சந்தேகம் எனக்கே தோன்ற ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு நான் சொன்னேன்.

                        "  Raja. let me answer your question this way " என்ற முன்னுரையுடன் பேச ஆரம்பித்தேன்.

                  ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து அதாவது 'நதிமூலம்' என்று சொல்லப்படும் அதன் தொடக்கத்திலிருந்து கடலில் சென்று கலக்கும் வரை மாறிக் கொண்டே இருக்கும் அதன் தோற்றத்தையும், வேகத்தையும், ஆழத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...
                   
                   ஆரம்பிக்கும் இடத்தில் அது ஒரு சிறிய ஊற்றாக இருக்கலாம். அப்படி ஆரம்பிக்கும் அந்த நதி சற்றுத் தள்ளி ஒரு சிறிய அருவியாக ஓடுகிறது. இன்னும் சற்றுத் தொலைவில் வேறு சிற்றருவிகள் சில அதனுடன் சேர்ந்து கொள்ள,அது ஒரு காட்டருவியாக உருமாறுகிறது. அதன் தோற்றத்திலும், வேகத்திலும் கணிசமான மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. இன்னுமொரு இடத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் பாறைகளிலிருந்து பேரழகும், பேரிரைச்சலும் கொண்ட நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. வேறு ஒரு இடத்தில் அது விரிந்து பரந்த நீர்த்தேக்கமாக ஸ்தம்பித்து நிற்பது போன்ற தோற்றத்துடனும் அதிக ஆழத்துடனும் காட்சியளிக்கிறது. அந்த நீர்த்தேக்கத்திலிருந்து வழிந்து கீழே உள்ள கூழாங்கற்களின் மீது ஒரு குட்டிப் பெண்ணின் குதூகலத்துடனும் சிலு சிலு என்ற சத்தத்துடனும் ஸ்படிகம் போன்ற தெளிவுடனும் துள்ளிக் குதித்தபடித் தொடர்கிறது.

                  இன்னும் சில இடங்களில் அது நிலத்தடி நீராக மாறிக் காணாமல் போய் விடுகிறது. பிறிதொரு இடத்தில் பொங்கும் சுனையாக அது வெளியே வந்து அகலம் குறைந்து, வேகம் அதிகரித்து அவசரம் அவசரமாக ஓடிச்சென்று கடலுடன் கலக்கிறது.

                  இப்படியாக ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து இறுதியில் கடலுடன் சென்று கலக்கும் வரை அதன் தோற்றத்திலும்
வேகம் மற்றும் ஆழம் ஆகியனவற்றிலும் மாறிக் கொண்டே இருக்கின்றது.

                 இந்த மாற்றங்களையெல்லாம் நதியா தீர்மானிக்கிறது?  இல்லவே இல்லை. ஒரு நதியின் அனைத்து மாற்றங்களையும் அதன் கீழேயுள்ள
நிலப்படுகை தானே - நிலத்தின் அமைப்பு தானே தீர்மானிக்கிறது !

                நான் பேசப் பேச ராஜாவின் அகத்தில் ஏற்பட்ட தெளிவு அவர் முகத்தில் தெரிகிறது.
     
                இதுபோலத்தான் ஒரு திரைப்படத்தின் இசையும். ஒரு திரைப்படத்திற்கான இசையை, குறிப்பாக அதன் பின்னணி இசையை,
அந்தப் படம் தான் - அந்தப் படத்தின் திரைக்கதை தான் script-தான்        
தீர்மானிக்கிறது. இசை மட்டுமல்ல, ஒளிப்பதிவையும், ஒலி அமைப்பையும்,
நடிப்பையும், படத்தொகுப்பையும், உடைகளையும் மற்றும் அந்தப் படத்தின் சகலத்தையும் தீர்மானிப்பது அதன் திரைக்கதை தான்! அதன் script-தான்.

                கேட்டுக் கொண்டிருந்த ராஜாவின் முகத்தில் புன்னகை மலர்கிறது. கைதட்டி ஆமோதிக்கிறார்.

               ஒரு திரைப்படத்தில் அதன் திரைக்கதையே மிக முக்கியமான அம்சம். அதன் தேவையை ஒட்டியே எல்லாம் இருக்க வேண்டும். திரைக்கதையின் தேவைக்கு அப்பாற்பட்டு, தன்னிச்சையாகச் செயல்படும் இசையோ, ஒளிப்பதிவோ, ஒலி அமைப்போ, நடிப்போ, அல்லது வேறு எதுவோ தனக்குத் தானே கவன ஈர்ப்பைக் கோரி நிற்குமே தவிர, சம்பந்தப்பட்ட படத்தோடு ஒட்டாது.

                அவர் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் ராஜாவை வெகுவாகத் திருப்திப்படுத்தியது. முழுவதுமாகப் புரிந்துகொண்டார். அன்று முதல் இன்று வரை எனது படங்களுக்கான அவரது இசை அந்தந்தத் திரைக்கதைகளின் தேவையை ஒட்டியே இருந்து வருகிறது.

               எனது படங்களில் வரும் பிரக்ஞைப்பூர்வமான மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் அவர். எனது அர்த்தமுள்ள மௌனங்களின் அழுத்தத்தை என்றுமே இசைகொண்டு அவர் கலைத்ததில்லை.
      That is my Raja..!
      இளையராஜா மற்றும் மூன்றாம்பிறை தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனுடன் நான்.. (1981)

Wednesday 12 September 2012

இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -1


12- sept- 2012
புதன்                

                  எழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் 
பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்குப் படவாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். ராஜாஜி அவர்களின்
கதையான "திக்கற்ற பார்வதியை" தமிழில் படமாக எடுத்துத் தேசிய விருது பெற்றவர்.
  
                    திக்கற்ற பார்வதியைத் தொடர்ந்து " தரம்மாறிந்தி " என்ற தெலுங்குப் படத்தை இயக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தை
நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஒத்துக்கொண்டேன். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளர் தான் அந்தப் படத்திற்கு இசை. ஜி.கே. வெங்கடேஷ் எம்.எஸ்.வி யுடன் பணியாற்றியவர். நல்ல இசை ஞானம் உள்ளவர்.அந்தப் படத்திற்கான மியூசிக் கம்போசிங் மாம்பலத்திலிருந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும். இசையமைப்பளர் ஜி.கே.வெங்கடேசுடன்,கம்போசிங் உதவியாளராக தேனியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூடவே வருவான். கிட்டார் கொண்டு வருவான். அவன் பெயர் இளையராஜா.

                              நான் ஒளிப்பதிவு செய்யும் படங்களின் மியூசிக் கம்போசிங், டான்ஸ் ரிகர்ஸல் மற்றும் எடிட்டிங் போன்றவைகளுக்கெல்லாம்
நான் போய் உட்காருவது வழக்கம். அந்தத் தெலுங்குப் படத்தின் மியூசிக் கம்போசிங்கின் போதுதான் இளையராஜாவுக்கும் எனக்கும் நட்பு 
ஏற்பட்டது. நான் பூனே திரைப்படப் பள்ளியில் பயின்று தங்கப் பதக்கம் வென்றவன் என்பதாலோ, அல்லது எனது ஒளிப்பதிவின் நேர்த்தியால் கவரப்பட்டதாலோ,இளையராஜா சினிமாவைப் பற்றியும், ஒளிப்பதிவின் நுட்பங்கள் பற்றியும் என்னிடம் நிறையப் பேசுவார். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நிறையப் பேசுவோம். நேரம் போவது தெரியாமல் பேசுவோம். 

                       என்றோ ஒருநாள், தான் இசையமைக்கப் போகும் தனது முதல் படத்திற்கென்று அவர் போட்டுவைத்திருந்த மெட்டுகளை எனக்குப் பாடிக் காண்பிப்பார். சில வருடங்கள் கழித்து அவர் இசையமைத்த முதற் படமான அன்னக்கிளியின் மெட்டுக்கள் சில அவர் எனக்குப் பாடிக்காண்பித்தவைதான். இளையராஜா என்ற அந்தக் கிராமத்து இளைஞரின் அசாத்தியமான திறன் என்னை அதிர வைத்தது.

                           நான் இயக்கும் முதல் படத்திற்கு இளையராஜாவைத்தான் இசையமைப்பாளராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தேன். 
            
                          எனது எண்ணத்தை ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் தெரியப்படுத்தவும் செய்தேன். அது கேட்ட ஜி.கே.வெங்கடேஷ்
சொன்ன தீர்க்கதரிசன வார்த்தைகள் எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கின்றன.. 
            " பாலு. இந்தப் பயலுக்கு மட்டும் நீங்க ஒரு சான்ஸ் குடுத்தீங்க... அம்புட்டுத்தான், எல்லாரையும் தூக்கி ஓரங்கட்டிடுவான். "

                    அப்படியே தான் நடந்தது. ஆனால் சான்ஸ் கொடுத்தது நானல்ல. பஞ்சு அருணாச்சலம் என்ற தயாரிப்பாளர். அவர் தயாரிப்பில் 
வந்த "அன்னக்கிளி" படத்தின் மூலம் இளையராஜா என்ற மேதையை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 

                  அன்னக்கிளி படமும், அதற்கான இளையராஜாவின் இசையும் மிகப் பெரிய வெற்றியீட்டின. அன்னக்கிளி படத்திற்குப் பின்
ராஜாவுக்கு உட்கார நேரமில்லாது தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார். வெற்றி மேல் வெற்றி. தங்களுடைய மண்ணின் இசையை, 
தமிழர்கள் இளையராஜா என்ற இந்தக் கிராமத்து இளைஞன் மூலம் தெரிந்து கொண்டார்கள். ராஜாவின் இசை, தமிழர்களின் இசை. தமிழ் 
மண்ணின் இசை. தமிழ்க் கிராமங்களின் மண்வாசனையோடும், அந்த மக்களின் வியர்வை வாசனையோடும் கலந்து வந்த இசை.

                         பூனே திரைப்படக் கல்லூரியில் எனது படிப்பை முடித்து தங்கப் பதக்கம் வென்று நான் வெளிவந்த வருடம் 1969.செம்மீன் புகழ் ராமு கரியாத், செம்மீனை அடுத்து இயக்கிய நெல்லு என்ற மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராக என்னை அறிமுகப்படுத்துகிறார்.வருடம் 1971. 

                           நெல்லு படத்தின் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி. செம்மீன் படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார். இந்தியத் திரையிசையின்
மகா மேதைகளில் ஒருவர் சலீல் சொத்ரி. நெல்லு படத்தின் ஒளிப்பதிவைப் பார்த்து பிரமித்துப் போன அவர் என் மீது மிகவும் பிரியமாக 
இருந்தார். அந்தப் பிரியத்தின் வெளிப்பாடாக அவர் ஒரு நாள் என்னிடம் சொன்னார். " பாலு நீ இயக்கும் முதல் படத்திற்கு நான் தான் இசையமைப்பேன்".இந்திய இசைவானில் தன்னிகரற்ற தனி நட்சத்திரமாகத் திகழ்ந்த அந்த மகா வித்வானின் அன்புக் கட்டளை அது. அவர் விரும்பியபடியே,எனது முதற் படமான "கோகிலா"வுக்கு அவரே இசையமைத்து என்னை ஒரு இயக்குனராகத் துவக்கி வைத்தார். அது நடந்த வருடம் 1976.

                        எனது முதற் படத்தின் இசையமைப்பாளராக எனது நண்பர் இளையராஜாவைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று 
ஆசைப்பட்டவன் நான். கன்னட கோகிலாவைத் தொடர்ந்து நான் இயக்கிய இரண்டாவது படம் " அழியாத கோலங்கள் ". தமிழ்ப்படம்.
இந்தப் படத்திற்கும் சலீல் சௌத்ரியே இசை அமைத்தார். அவர் வேண்டுகோளை என்னால் தட்டமுடியவில்லை. 78-ல் நான் இயக்கிய 
எனது மூன்றாவது படம் " மூடுபனி ". இந்தப் படத்திற்குத்தான் நான் இளையராஜாவை வைத்துக் கொள்ள முடிந்தது. மூடுபனி எனக்கு 
மூன்றாவது படம். இளையராஜாவுக்கு அது நூறாவது படம். இளையராஜா அத்தனை வேகமாகப் போய்க்கொண்டிருந்தார். 
            
                            மூடுபனியில் தொடங்கி 2005-ல் வெளிவந்த "அது ஒரு கனாக்காலம்" வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர். 

                         நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் "தலைமுறைகள்" 
என்று (தற்காலிகமாக) பெயரிடப்பட்டிருக்கும் எனது 22-வது படத்திற்கும் இளையராஜாதான் இசை. இதை நான் இன்னும் ராஜாவிடம் சொல்லவில்லை.
படத்தை முடித்து அவருக்குப் போட்டுக் காண்பித்தபின் சொல்லலாமென்றிருக்கிறேன்.

                             78-ல் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை தொடர்கிறது...
                             34 இனிய வருடங்கள் ! இனியும் அப்படித்தான்.

                இன்னும் ஐந்தாறு படங்களாவது செய்துவிட்டுப் போகவேண்டும் என்பது என் எண்ணம். கண்டிப்பாகச் செய்வேன்.அவை எல்லாவற்றிற்கும் இசை எனது ராஜா தான். அதில் மாற்றம் கிடையாது.