Pages

Thursday, 6 December 2012

ஷோபா என்றொரு தேவதை


06-dec-2012
வியாழன்

        “ சண்டே இண்டியன் பத்திரிக்கைக்கு ஷோபா பற்றி  ஒரு கட்டுரை எழுத வேண்டும். கேட்டது சுந்தர புத்தன். புத்தன் எனது நண்பர். நான் மதிக்கும் எழுத்தாளர். கட்டுரை ஷோபா பற்றியது. உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

         இது இருபது நாட்களுக்கு மேலாகிவிட்டது. கட்டுரை இன்னும் கைகூடவில்லை.புத்தன் நேற்று வந்திருந்தார். கட்டுரை பற்றி விசாரித்தார். இன்னும் இரண்டு நாளில் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன்.

         ஷோபா பற்றி எழுத உட்கார்ந்த ஒவ்வொரு தடவையும் உணர்ச்சிவசப்பட்டு அழுதேனே தவிர ஒரு வரி எழுதமுடியவில்லை.

         இன்று மறுபடியும் எழுத உட்காருகிறேன்.ஞாபகங்கள் மீண்டும் கண்ணை நனைக்கின்றன. எழுந்து முகம் அலம்பிவிட்டு எழுதத் தொடங்குகிறேன்.

        தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது?

        அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா       ஒரு அற்புதமான நடிகை என்பதையா... நடிப்பில் மிகுந்த
 தனித்தன்மையையும் தனக்கே தனக்கென்று நிறையப்  பிரத்தியேகதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா...

         குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசோடு சதா வியப்பும் பிரமிப்புமாக பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா...?

        அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தையா..?

   எதை?  எதை எழுதுவது?

         மிக அடர்த்தியான உணர்வுகள் முட்டி மோதும் சமயங்களில் வார்த்தைகள் காணாமல் போய் விடுகின்றன. நாம் தலையில் வைத்து கொண்டாடும் நமது தமிழ் நம்மை “அம்போ என்று விட்டு விலகிக்கொள்கிறது.

         அந்த மனநிலையில் எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன்.

         ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார். அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன்.

       அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது. அதில் ஒரு கேள்வி:
       மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே... எப்படி இது...?

ஷோபா சொல்லியிருந்த பதில்:

      “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இது தான் காரணம்.

        எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது.

       தேவலோக வாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா.

       ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம்.

       அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான   உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். “மூன்றாம் பிறை படம் மூலமாக.

        மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.!

        நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன்.

        ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு........

எனக்கு......

       எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்...!

நன்றி “சன்டே இண்டியன்.