Pages

Thursday, 11 October 2012

சினிமாவும் பால் வியாபரமும் ...



11-oct-2012
வியாழன்


             கன்றுக் குட்டிக்கான பாலைக் கறந்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருவன் நினைத்த மாத்திரத்திலேயே அவன்
வியாபாரியாகிறான். இதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

               அதுபோல, தன் குடும்பத்துக்கு செலவு செய்ய வேண்டிய பணத்தை
சினிமாவில் போட்டு லாபம் பார்க்கலாம் என்று நினைத்த மாத்திரத்திலேயே
ஒருவன் வியாபாரியாகிறான். அந்த வகையில் சினிமாத் தயாரிப்பாளர்கள்
அனைவருமே வியாபாரிகள் தான். இதில் விதிவிலக்கெல்லாம் கிடையாது.

            தான் விற்பனை செய்யும் பாலில், ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கலப்பதில்லை என்ற திடசங்கல்பத்தில் ஒரு பால் வியாபாரி.
லிட்டருக்கு 250 மில்லி தண்ணீர் என்ற எண்ணத்தில் இன்னுமொரு பால் வியாபாரி. லிட்டருக்குப் பாதிக்குப் பாதி தண்ணீர் என்ற முடிவில்
மூன்றாவது வியாபாரி.

            அவனவன் மனனிலைக்கு - attitude -க்கு ஏற்ப அல்லது பணம் பண்ணும் ஆசைக்கு ஏற்ப பால் சுத்தமாக அல்லது கலப்படமாக நமக்குக்
கிடைக்கிறது.

            சினிமா வியாபாரமும் அப்படித்தான்.

           தயாரிப்பாளரும் இயக்குனர்களும் அவரவர் மனனிலைக்கேற்ப சமரசங்கள்- compromises செய்துகொள்கிறார்கள். தரமான தூய சினிமா
மட்டுமே தருவேன் என்று ஒரு தயாரிப்பாளர், அல்லது இயக்குனர். நல்ல படம் தருவேன் ஆனால் வியாபாரம் கருதி அதில் கொஞ்சம் " ஐட்டங்களும் " வைப்பேன் என்ற மனநிலையில் இன்னுமொரு தயாரிப்பாளர் அல்லது இயக்குனர்.

           படம் எடுப்பேன், ஆனால் அது வியாபார நோக்கத்தில் மட்டுமே! எனவே எனது படத்தில் " விலைபோகக்கூடிய " அம்சங்கள் நிறைய இருக்கும் என்ற முடிவுடன் மூன்றாவது தயாரிப்பாளர்.

           இப்படியாக பால் வியாபாரம் செய்ய வருபவரின் நோக்கத்தைப் பொறுத்து, பாலின் தரம் அமைவதைப் போல, படம் எடுக்க வருபவரின்
நோக்கத்தைப் பொறுத்தே படத்தின் தரம் அமையும். தரமான -கலப்படமில்லாத பாலை மட்டும் தான் வாங்குவோம் என்று பால் வாங்குபவர்கள் முடிவு செய்தால், கலப்படம் செய்து பால் விற்கும் வியாபாரிகள் காலக் கிரமத்தில் குறையத் தொடங்குவார்கள். இது எனது நப்பாசை - wishful thinking!

          இது நடக்கிற காரியமில்லை என்பது எனக்குத் தெரியும்.....!

          சினிமா கற்றுக் கொள்ள பூனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த 1966 முதல் இன்று வரை, கிட்டத்தட்ட 46- ஆண்டுகளில் எந்த வித வணிக சமரசங்களும் இல்லாமல் இரண்டே இரண்டு படங்களை மட்டும் தான் என்னால் கொடுக்க முடிந்தது. "வீடு", "சந்தியாராகம்" என்ற இரண்டு படங்கள் தான் அவை. எனது மற்ற படங்கள் எல்லாமே பாடல் காட்சிகள் போன்ற சில வணிக சமரசங்களுடன் பண்ணப்பட்ட படங்கள் தான். ஆனால் அவற்றில் பல படங்கள் நல்ல படங்கள் என்று இன்று வரை மக்களால் கொண்டாடப்படும் படங்களாகவும், அதே சமயம் 200 நாட்களுக்குமேல் ஓடி வசூல் சாதனை புரிந்த படங்களாகவும் அமைந்து போனது என் அதிர்ஷ்டம்!

          பெரிய திரையை விட சின்னத்திரையில் தான் "படைப்புச் சுதந்திரம்"- creativity freedom எனக்கு அதிகம் கிடைத்தது. 1999 செப்டம்பர் முதல் 2000 செப்டம்பர் வரை சன் தொலைக்காட்சிக்காக நான் செய்த "கதை நேரம்" குறும்படங்கள் படைப்பாளி என்ற வகையில் எனக்கு மிகவும் திருப்தியான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு புதன் கிழமையும் ஒரு குறும்படம் என்ற வகையில் 52 குறும்படங்கள் செய்தேன். இந்த 52-ல் ஒரு 20-25 குறும்படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது எனது கணிப்பு. ஆங்கில அடியெழுத்துக்களுடன்  (with subtitles) இவற்றை எந்த நாட்டிலும் திரையிடலாம். அப்படியொரு உலகளாவிய தன்மை அமைந்து போன குறும்படங்கள் அவை. தொலைக்காட்சியில் அவை காண்பிக்கப்பட்டும் 12-15 வருடங்களாகின்றன. இன்னும் மக்கள் அந்தக் குறும்படங்கள் பற்றிச் சிலாகிக்கின்றனர். "கதை நேரம்" குறும்படங்கள், பல கல்லூரிகளிலும் திரைப்படப் பள்ளிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்று அறிகிறேன். ரொம்ப சந்தோஷம்.