Pages

Wednesday 3 October 2012

ஜெயகாந்தன் என்ற ஆளுமையும் நானும்....


03- oct- 2012
புதன்


                  அவன் மூக்கிற்கும், மேல் உதட்டிற்கும் இடையே உள்ள பகுதியிலும் அவன் பிறப்புறுப்புக்குத் தொட்டடுத்த மேல் பகுதியிலும், புழுதி படிந்தாற் போல பொன்னிற ரோமங்கள் வளரத் தொடங்கியிருந்த காலம்...

                அம்புலிமாமாவிலிருந்து, அகிலன், கல்கி, மு.வரதராசன்,
நா.பார்த்தசாரதி, எஸ்.கணேசலிங்கம், டொமினிக் ஜீவா, லட்சுமி, சூடாமணி,
என அவன் வாசிப்பு வளரத் தொடங்கியிருந்த காலம்...

                "முத்திரைக்கதை" முக்கியத்துவத்துடன் ஜெயகாந்தன் என்ற இளம் எழுத்தாளரை ஆனந்த விகடன் பிரபலப் படுத்திக் கொண்டிருந்த காலமும் அதுதான்...

              அவன் அப்பாதான் ஜெயகாந்தனை அவனுக்கு  அறிமுகப் படுத்தியிருந்தார்.  விகடனில் அவன் படித்த முதல் ஜெயகாந்தன் கதை
"துர்கா". அந்தக் கதை அவனை மிரட்டியிருந்தது. இதுவரை ஏற்படாத வாசிப்பு அனுபவம் அது. அந்தக் கதை அவனுள் ஏற்படுத்திய தாக்கத்தையும்,
அதிர்வுகளையும் அன்று சாயந்தரம் ஆற்றங்கரையில் உட்கார்ந்து அவன் அப்பாவோடு பேசும்போது அவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்
என்று முடிவு பன்னியிருந்தான். அதுகாரணம், சாயந்தரம் அப்பாவோடு ஆற்றங்கரைக்குப் போகும்போது துர்கா வந்திருந்த விகடனையும்
எடுத்துப் போயிருந்தான்.

              அவன் கையில் விகடனைப் பார்த்ததும் அப்பா புரிந்து கொண்டார். அவனிடமிருந்து பத்திரிகையை வாங்கிய அவர், அதில் வந்திருந்த
 ஜெயகாந்தன் கதையை நிதானமாகப் படிக்கத் தொடங்கினார். அவருக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த அவன் அப்பா படிக்கப் படிக்க அவர் முகத்தில்
ஏற்படும் பலதரப்பட்ட பாவமாற்றங்களை உன்னிப்பாக அவதானித்தும், ரசித்தும் கொண்டிருந்தான். படித்து முடித்ததும் அப்பா அவனைப்
பார்த்து ஆங்கிலத்தில் சொன்னார்... " This guy is brilliant!".

             அவன் கிராமத்திற்குச் சற்றுத் தொலைவில், கடலுடன் கலக்கும் அமிர்தகழி ஆற்றங்கரையின் கட்டில் அமர்ந்து, தொங்க விட்ட கால்
நீரில் நனைய, காலிலுள்ள புண்களை மீன்கள் கொத்தக் கொத்த அப்பாவோடு இலக்கியம் பேசுவது, சினிமா பேசுவது, வாழ்க்கை பேசுவது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவன் அப்பா ஒரு தேர்ந்த ரசிகர். வாழ்க்கையின் ஒவ்வொரு க்ஷணத்தையும் உணர்ந்து, ரசித்து வாழ்ந்தவர். அவர் ஒரு கணிதப் பேராசிரியராக இருந்தும், தமிழிலும், சமஸ்கிருதத்திலும், அறிவியலிலும் மிக்க பாண்டித்தியம் உள்ளவர்.

               அவனுடைய மிக நெருங்கிய நண்பன் என்றால், அது அவன் அப்பாதான். அப்பாவும் அவனும் பகிர்ந்துகொள்ளாத விஷயங்களே இல்லை. சுத்தானந்த அடிகளார் முதல் சுய இன்பம் வரை. கம்பர் முதல் காளிதாசன் வரை. அவன் பால்ய சினேகிதி அன்னலட்சுமி முதல் அவ்வையார் வரை எல்லாவற்றையும் பற்றி அவன் அப்பா அவனோடு பேசுவார். அப்படியொரு அப்பா அவனுக்கு வாய்த்தது பற்றி இப்பொழுதும் அவன்  பெருமைப்படுவதுண்டு. அவன் இன்றுள்ள இவனாக இருப்பதற்கு அவன் அப்பா ஒரு மிகப்பெரிய காரணி. அன்று படித்த ஜெயகாந்தன் கதையை முன் வைத்து அப்பா இலக்கிய ரசனையின் பல நுணுக்கங்களை அவனுக்கு அன்று சொல்லிக் கொடுத்தார்.

             அந்தக் கதையின் உள்ளடக்க அடர்த்தி.... அதில் சொல்லப்பட்டிருந்த முற்போக்கான கருத்து... கதாப்பாத்திரப் படைப்பு... கதைக்களம்,
கதை நெடுகிலும் விரவிக் கிடந்த காட்சி வடிவ அழகு, அப்புறம் அந்தக் கதையைச் சொல்லும் பொழுது ஜெயகாந்தனுக்குக் கைகூடியிருந்த
உள்ளடக்கத்திற்குப் பொருத்தமான உருவ அமைப்பு.... ஜெயகாந்தனின் சொற்த்தேர்வு, அவர் வாக்கிய அமைப்பின் தனித்தன்மை, நடையின்
லாவகம், மொழி ஆளுமை.. இப்படி ஜெயகாந்தன் கதையை முன்வைத்து, இலக்கிய ரசனை பற்றி நிறைய விஷயங்களை அப்பா அன்று  பேசியிருந்தார்.

                அடுத்த வாரம் ஜெயகாந்தன் கதை வர இருக்கிறதென்றால், அதை முதல் வாரமே விகடனில் அறிவித்து விடுவார்கள்.

                சென்னையில் பிரசுரமாகும் விகடன், ரயில் மூலம் ராமேஸ்வரம் போய், ராமேஸ்வரத்திலிருந்து கப்பலில் கடல்கடந்து தலைமன்னார் சென்று தலைமன்னாரிலிருந்து, இலங்கையின் தலைநகரான கொழும்பிற்குப்போய், கொழும்பிலிருந்து மீண்டும் ரயிலில் அவனது ஊரான மட்டக்களப்பிற்கு அனுப்பப்பட்டு, மட்டக்களப்பிலிருந்து அவனது கிராமமான அமிர்தகழிக்கு பஸ்ஸில் வந்து சேர, பிரசுரமான தேதியிலிருந்து பத்துப் பன்னிரண்டு நாட்களாகும்...

              ஜெயகாந்தன் கதை அவன் கிராமத்திற்கு வந்து சேரும் வரை காத்திருக்க அவனுக்குப் பொறுமையில்லை. அவன் வட்டாரத்திலுள்ள  வேறு எவனும் படிப்பதற்குமுன் ஜெயகாந்தன் கதையை அவன் படித்தாக வேண்டும் என்ற பிடிவாதம் அவனுக்கு.

             கொழும்பிலிருந்து விகடனைச் சுமந்து வரும் ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்குக் காலை ஐந்தரை மணிக்கு வந்து சேரும். ஐந்தரை மணிக்கு ரயில் நிலையத்தில் இருக்க வேண்டுமென்றால், அதிகாலை நாலு மணிக்கு அவன் எழுந்திருக்க வேண்டும். நாலு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, அது போதாதென்று அவன் அம்மாவிடமும் எழுப்பிவிடு என்று சொல்லிவிட்டுப் படுத்துக் கொள்வான். காலையில் ஜெயகாந்தன் கதை படிக்கப் போகிறான் என்ற குஷியில் அவனுக்கு இரவெல்லாம் தூக்கம் வராது. ரொம்பநேரம் வரை அதைப்பற்றி யோசித்தபடியே உழன்றுவிட்டு இரண்டுமணிக்கு மேல் அசதி காரணம் கண்ணயர்ந்த சில நிமிடங்களுக்குள் அலாரம் அடிக்கும். கூடவே அம்மாவும் எழுப்பி விடுவாள். அவசரமாக எழுந்து குளித்து ரெடியாகிவிடுவான். ஐந்தரைக்கு முன்பே ரயில் நிலையத்தில் இருப்பான். ஐந்தரைக்கு ரயில் வரும். மட்டக்களப்பிற்கான பத்திரிகைக் கட்டுகள் இறக்கப்பட்டு பிரிக்கப்பட்டு அதிலிருந்து நான்கு விகடன் பிரதிகள் ரயில் நிலைய டீக்கடைக்குக் கொடுக்கப்படும். அந்த நான்கு பிரதிகளில் ஒன்றை அவன் வாங்கிக் கொள்வான். வாங்கின கையோடு ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்து  ஜெயகாந்தன் முத்திரைக்கதையைப் படித்து முடிப்பான். அந்த ரயில் நிலைய சத்தங்களுக்கிடையில், காலைக் குளிர்காற்றில் ஜெயகாந்தன் கதை
படிப்பது தான் எத்தனை இனிய அனுபவம்! அவன் படித்து முடிப்பதற்கும் ஸ்டேஷன் டீக்கடைக்காரர் ஆவிபறக்கும் டீ டம்ளரை அவனருகே
வைத்து " குடி" என்று சொல்வதற்கும் சரியாக இருக்கும். ஸ்டேஷன் டீக்கடையின் அந்த நேரத்து டீ அமிர்தம். ரசித்துக் குடித்துவிட்டு
சைக்கிள் எடுப்பான். வீடு போவதற்கான நேரத்தை வேண்டுமென்றே நீட்டுவான். படித்த ஜெயகாந்தன் கதை வழிநெடுகிலும் அவன் மனத்திரையில்
வரிக்கு வரி காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும்..

                 அதெல்லாம் ஒரு காலம்.... அந்த வயசும், அவன் வளர்ந்த சூழலும், அவன் அப்பாவின் ஊக்கமும், அவனது கிராமத்து நண்பர்களின்
இலக்கிய ஆர்வமும், அயல் வீட்டு அன்னலட்சுமியின் காதலும், ஓ... எத்தனை இனிமை... விடலைப் பருவத்தின் வியப்பு மிகுந்த அந்தக் காலம் இனி திரும்பி வருமா...?

      அதை இப்பொழுது நினைத்துப் பார்க்கையில், அதை இழந்துவிட்டோம் என்ற வருத்தம் அவனுக்கில்லை... மாறாக அப்படியொரு காலம் அவனுக்குச் சொந்தமாக இருந்ததே என்ற பெருமிதம் தான் அவனுக்கு.

     அதுசரி, மீசை கறுக்காத அந்த விடலை - அந்த ஜெயகாந்தன் பைத்தியம் யார் என்று இன்னும் சொல்லவில்லையே... அவன் பெயர் மகேந்திரா. அப்பா பெயர் பாலநாதன். அவரது நண்பர்கள் அப்பாவை பாலு பாலு என்று அழைப்பார்கள். அதனால் வெறும் மகேந்திராவாக இருந்த அவன் பிற்காலத்தில் பாலுமகேந்திரா என அழைக்கப்பட்டான்.. மன்னிக்கவும் அழைக்கப்படுகிறான்!