Pages

Wednesday 19 September 2012

இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -2


19.SEPT.2012
புதன்


                   எனது மூடுபனி படத்திலிருந்துதான் நான் இளையராஜாவுடன் பணியாற்றத் தொடங்கினேன் என்று சொல்லியிருந்தேன். மூடுபனி
எனக்கு மூன்றாவது படம். ஆனால் இசைஞானிக்கோ அது நூறாவது படம். என்றும் சொல்லியிருந்தேன். மூடுபனி ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்.

                 எனது மானசீக ஆசான்களில் ஒருவரான ஆல்ஃபிரெட் ஹிச்காக் என்ற மாமேதைக்கு மரியாதை செலுத்தும் முகமாகத் தமிழில் நான் எடுத்த சஸ்பென்ஸ் திரில்லர். எனது ஷோபாவும் அழியாத கோலங்களில் நான் அறிமுகப்படுத்திய பிரதாப் போத்தனும் சேர்ந்து அற்புதமாக நடித்திருந்த படம். எனது இயக்கத்தில் வந்த முதற் படமான கோகிலாவில் மோகன் என்ற வங்கி ஊழியரை நான் நடிகராக அறிமுகப்படுத்தியிருந்தேன். கன்னடிகரான அவரை எனது மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்துவைத்தேன்.பிற்காலத்தில் தமிழ்த் திரை வானில் அவர் ஜொலிக்கும் நட்சத்திரமாகத் திகழ்ந்தது சந்தோஷம்.

                மூடுபனி படத்திற்கு முன்பும் அதன் பின்புமாக யேசுதாஸ் பல நூறு பாடல்களைப் பாடியிருக்கிறார். இருப்பினும்,தனக்கு மிகவும் பிடித்த சினிமாப் பாடல் என்று இன்றுவரை அவர் சொல்லிக்கொண்டிருப்பது மூடுபனி படத்தில் வந்த ' என் இனிய பொன் நிலாவே ' பாடல் தான்.

                71 முதல் 76 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளனாக மட்டும் பணியாற்றிவிட்டு 76-ல் நான் திரைப்பட இயக்கத்தில் ஈடுபடுகிறேன். நான் இயக்கிய முதல் படம் கோகிலா. கன்னடப் படம். நான் இயக்கும் படங்களின் திரைக்கதை, ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றையும் நானே செய்வது வழக்கம். எனது முதற்படமான கோகிலாவிலிருந்து கடைசியாக வெளிவந்த அது ஒரு கனாக்காலம் வரை அப்படித்தான். நான் இயக்கும் படங்களுக்கான இசை, குறிப்பாக பின்னணி இசை எங்கு தொடங்கி எங்கு முடிய வேண்டும், அது எப்படிப்பட்ட இசையாக இருக்கவேண்டும் என்பவற்றில் நான் வெகு உன்னிப்பாக இருப்பேன். இவற்றையெல்லாம் அந்தந்தப் படங்களுக்கான திரைக்கதைகளை எழுதும்போதே நான் தீர்மானித்துக் கொள்வேன்.

                  படத்தொகுப்பு முற்றிலுமாக முடிந்து, அடுத்த கட்டமான இசைச் சேர்க்கைக்குத் தயாரானதும், அந்தப் படத்திற்கான இசை பற்றிய எனது எண்ணங்களை எனது இசையமைப்பாளருக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துவேன். எனது படங்களில் பிரக்ஞைப்பூர்வமாக நான் வைக்கும் மௌனங்களை, உணர்வு பொதிந்த, அர்த்தமுள்ள அந்த மௌனங்களை இசைகொண்டு கலைக்க வேண்டாம் என்றும் என் இசையமைப்பாளரிடம் நான் கேட்டுக் கொள்வேன்.

                   நான் இயக்கிய முதல் இரண்டு படங்களுக்கும் இசை அமைத்த இந்தியத் திரையிசையின் மாமேதைகளில் ஒருவரான சலீல் சௌத்ரி அவர்களிடமும் அந்தப் படங்களுக்கான இசை பற்றிய எனது எண்ணங்களைத் தெரியப்படுத்தியே அவற்றிற்கான இசையைப் பெற்றுக்கொண்டேன்.

                   மூடுபனி படத்தின் இசைச் சேர்க்கைக்கு முன், அதற்கான இசை எப்படி இருக்கவேண்டும் என்ற எனது எண்ணங்களை இளையராஜாவுக்கு மிக நுணுக்கமாகத் தெரியப்படுத்தியிருந்தேன்.

                      எனது மூன்றாவது படமான மூடுபனி இளையராஜாவுக்கு நூறாவது படம். மூடுபனிக்கு முன் 99 படங்களுக்கு இசையமைத்து வெற்றியின் உச்சத்தில் அவர் இருந்த காலம் அது. இசைஞானியுடன் பணியாற்றத் தொடங்கிய அந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள் ராஜா என்னிடம் கேட்டார்.

                     " ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது? "

                   என்ன மன நிலையில் அந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது என்பதை உடனடியாக நான் புரிந்துகொண்டேன். இசை அமைப்பதில் அதுவரை அவர் அனுபவித்து வந்த படைப்புச் சுதந்திரத்திற்குள் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற சந்தேகம் எனக்கே தோன்ற ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு நான் சொன்னேன்.

                        "  Raja. let me answer your question this way " என்ற முன்னுரையுடன் பேச ஆரம்பித்தேன்.

                  ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து அதாவது 'நதிமூலம்' என்று சொல்லப்படும் அதன் தொடக்கத்திலிருந்து கடலில் சென்று கலக்கும் வரை மாறிக் கொண்டே இருக்கும் அதன் தோற்றத்தையும், வேகத்தையும், ஆழத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...
                   
                   ஆரம்பிக்கும் இடத்தில் அது ஒரு சிறிய ஊற்றாக இருக்கலாம். அப்படி ஆரம்பிக்கும் அந்த நதி சற்றுத் தள்ளி ஒரு சிறிய அருவியாக ஓடுகிறது. இன்னும் சற்றுத் தொலைவில் வேறு சிற்றருவிகள் சில அதனுடன் சேர்ந்து கொள்ள,அது ஒரு காட்டருவியாக உருமாறுகிறது. அதன் தோற்றத்திலும், வேகத்திலும் கணிசமான மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. இன்னுமொரு இடத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் பாறைகளிலிருந்து பேரழகும், பேரிரைச்சலும் கொண்ட நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. வேறு ஒரு இடத்தில் அது விரிந்து பரந்த நீர்த்தேக்கமாக ஸ்தம்பித்து நிற்பது போன்ற தோற்றத்துடனும் அதிக ஆழத்துடனும் காட்சியளிக்கிறது. அந்த நீர்த்தேக்கத்திலிருந்து வழிந்து கீழே உள்ள கூழாங்கற்களின் மீது ஒரு குட்டிப் பெண்ணின் குதூகலத்துடனும் சிலு சிலு என்ற சத்தத்துடனும் ஸ்படிகம் போன்ற தெளிவுடனும் துள்ளிக் குதித்தபடித் தொடர்கிறது.

                  இன்னும் சில இடங்களில் அது நிலத்தடி நீராக மாறிக் காணாமல் போய் விடுகிறது. பிறிதொரு இடத்தில் பொங்கும் சுனையாக அது வெளியே வந்து அகலம் குறைந்து, வேகம் அதிகரித்து அவசரம் அவசரமாக ஓடிச்சென்று கடலுடன் கலக்கிறது.

                  இப்படியாக ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து இறுதியில் கடலுடன் சென்று கலக்கும் வரை அதன் தோற்றத்திலும்
வேகம் மற்றும் ஆழம் ஆகியனவற்றிலும் மாறிக் கொண்டே இருக்கின்றது.

                 இந்த மாற்றங்களையெல்லாம் நதியா தீர்மானிக்கிறது?  இல்லவே இல்லை. ஒரு நதியின் அனைத்து மாற்றங்களையும் அதன் கீழேயுள்ள
நிலப்படுகை தானே - நிலத்தின் அமைப்பு தானே தீர்மானிக்கிறது !

                நான் பேசப் பேச ராஜாவின் அகத்தில் ஏற்பட்ட தெளிவு அவர் முகத்தில் தெரிகிறது.
     
                இதுபோலத்தான் ஒரு திரைப்படத்தின் இசையும். ஒரு திரைப்படத்திற்கான இசையை, குறிப்பாக அதன் பின்னணி இசையை,
அந்தப் படம் தான் - அந்தப் படத்தின் திரைக்கதை தான் script-தான்        
தீர்மானிக்கிறது. இசை மட்டுமல்ல, ஒளிப்பதிவையும், ஒலி அமைப்பையும்,
நடிப்பையும், படத்தொகுப்பையும், உடைகளையும் மற்றும் அந்தப் படத்தின் சகலத்தையும் தீர்மானிப்பது அதன் திரைக்கதை தான்! அதன் script-தான்.

                கேட்டுக் கொண்டிருந்த ராஜாவின் முகத்தில் புன்னகை மலர்கிறது. கைதட்டி ஆமோதிக்கிறார்.

               ஒரு திரைப்படத்தில் அதன் திரைக்கதையே மிக முக்கியமான அம்சம். அதன் தேவையை ஒட்டியே எல்லாம் இருக்க வேண்டும். திரைக்கதையின் தேவைக்கு அப்பாற்பட்டு, தன்னிச்சையாகச் செயல்படும் இசையோ, ஒளிப்பதிவோ, ஒலி அமைப்போ, நடிப்போ, அல்லது வேறு எதுவோ தனக்குத் தானே கவன ஈர்ப்பைக் கோரி நிற்குமே தவிர, சம்பந்தப்பட்ட படத்தோடு ஒட்டாது.

                அவர் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் ராஜாவை வெகுவாகத் திருப்திப்படுத்தியது. முழுவதுமாகப் புரிந்துகொண்டார். அன்று முதல் இன்று வரை எனது படங்களுக்கான அவரது இசை அந்தந்தத் திரைக்கதைகளின் தேவையை ஒட்டியே இருந்து வருகிறது.

               எனது படங்களில் வரும் பிரக்ஞைப்பூர்வமான மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் அவர். எனது அர்த்தமுள்ள மௌனங்களின் அழுத்தத்தை என்றுமே இசைகொண்டு அவர் கலைத்ததில்லை.
      That is my Raja..!
      இளையராஜா மற்றும் மூன்றாம்பிறை தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனுடன் நான்.. (1981)

Wednesday 12 September 2012

இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -1


12- sept- 2012
புதன்                

                  எழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் 
பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்குப் படவாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். ராஜாஜி அவர்களின்
கதையான "திக்கற்ற பார்வதியை" தமிழில் படமாக எடுத்துத் தேசிய விருது பெற்றவர்.
  
                    திக்கற்ற பார்வதியைத் தொடர்ந்து " தரம்மாறிந்தி " என்ற தெலுங்குப் படத்தை இயக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தை
நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஒத்துக்கொண்டேன். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளர் தான் அந்தப் படத்திற்கு இசை. ஜி.கே. வெங்கடேஷ் எம்.எஸ்.வி யுடன் பணியாற்றியவர். நல்ல இசை ஞானம் உள்ளவர்.அந்தப் படத்திற்கான மியூசிக் கம்போசிங் மாம்பலத்திலிருந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும். இசையமைப்பளர் ஜி.கே.வெங்கடேசுடன்,கம்போசிங் உதவியாளராக தேனியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூடவே வருவான். கிட்டார் கொண்டு வருவான். அவன் பெயர் இளையராஜா.

                              நான் ஒளிப்பதிவு செய்யும் படங்களின் மியூசிக் கம்போசிங், டான்ஸ் ரிகர்ஸல் மற்றும் எடிட்டிங் போன்றவைகளுக்கெல்லாம்
நான் போய் உட்காருவது வழக்கம். அந்தத் தெலுங்குப் படத்தின் மியூசிக் கம்போசிங்கின் போதுதான் இளையராஜாவுக்கும் எனக்கும் நட்பு 
ஏற்பட்டது. நான் பூனே திரைப்படப் பள்ளியில் பயின்று தங்கப் பதக்கம் வென்றவன் என்பதாலோ, அல்லது எனது ஒளிப்பதிவின் நேர்த்தியால் கவரப்பட்டதாலோ,இளையராஜா சினிமாவைப் பற்றியும், ஒளிப்பதிவின் நுட்பங்கள் பற்றியும் என்னிடம் நிறையப் பேசுவார். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நிறையப் பேசுவோம். நேரம் போவது தெரியாமல் பேசுவோம். 

                       என்றோ ஒருநாள், தான் இசையமைக்கப் போகும் தனது முதல் படத்திற்கென்று அவர் போட்டுவைத்திருந்த மெட்டுகளை எனக்குப் பாடிக் காண்பிப்பார். சில வருடங்கள் கழித்து அவர் இசையமைத்த முதற் படமான அன்னக்கிளியின் மெட்டுக்கள் சில அவர் எனக்குப் பாடிக்காண்பித்தவைதான். இளையராஜா என்ற அந்தக் கிராமத்து இளைஞரின் அசாத்தியமான திறன் என்னை அதிர வைத்தது.

                           நான் இயக்கும் முதல் படத்திற்கு இளையராஜாவைத்தான் இசையமைப்பாளராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தேன். 
            
                          எனது எண்ணத்தை ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் தெரியப்படுத்தவும் செய்தேன். அது கேட்ட ஜி.கே.வெங்கடேஷ்
சொன்ன தீர்க்கதரிசன வார்த்தைகள் எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கின்றன.. 
            " பாலு. இந்தப் பயலுக்கு மட்டும் நீங்க ஒரு சான்ஸ் குடுத்தீங்க... அம்புட்டுத்தான், எல்லாரையும் தூக்கி ஓரங்கட்டிடுவான். "

                    அப்படியே தான் நடந்தது. ஆனால் சான்ஸ் கொடுத்தது நானல்ல. பஞ்சு அருணாச்சலம் என்ற தயாரிப்பாளர். அவர் தயாரிப்பில் 
வந்த "அன்னக்கிளி" படத்தின் மூலம் இளையராஜா என்ற மேதையை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 

                  அன்னக்கிளி படமும், அதற்கான இளையராஜாவின் இசையும் மிகப் பெரிய வெற்றியீட்டின. அன்னக்கிளி படத்திற்குப் பின்
ராஜாவுக்கு உட்கார நேரமில்லாது தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார். வெற்றி மேல் வெற்றி. தங்களுடைய மண்ணின் இசையை, 
தமிழர்கள் இளையராஜா என்ற இந்தக் கிராமத்து இளைஞன் மூலம் தெரிந்து கொண்டார்கள். ராஜாவின் இசை, தமிழர்களின் இசை. தமிழ் 
மண்ணின் இசை. தமிழ்க் கிராமங்களின் மண்வாசனையோடும், அந்த மக்களின் வியர்வை வாசனையோடும் கலந்து வந்த இசை.

                         பூனே திரைப்படக் கல்லூரியில் எனது படிப்பை முடித்து தங்கப் பதக்கம் வென்று நான் வெளிவந்த வருடம் 1969.செம்மீன் புகழ் ராமு கரியாத், செம்மீனை அடுத்து இயக்கிய நெல்லு என்ற மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராக என்னை அறிமுகப்படுத்துகிறார்.வருடம் 1971. 

                           நெல்லு படத்தின் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி. செம்மீன் படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார். இந்தியத் திரையிசையின்
மகா மேதைகளில் ஒருவர் சலீல் சொத்ரி. நெல்லு படத்தின் ஒளிப்பதிவைப் பார்த்து பிரமித்துப் போன அவர் என் மீது மிகவும் பிரியமாக 
இருந்தார். அந்தப் பிரியத்தின் வெளிப்பாடாக அவர் ஒரு நாள் என்னிடம் சொன்னார். " பாலு நீ இயக்கும் முதல் படத்திற்கு நான் தான் இசையமைப்பேன்".இந்திய இசைவானில் தன்னிகரற்ற தனி நட்சத்திரமாகத் திகழ்ந்த அந்த மகா வித்வானின் அன்புக் கட்டளை அது. அவர் விரும்பியபடியே,எனது முதற் படமான "கோகிலா"வுக்கு அவரே இசையமைத்து என்னை ஒரு இயக்குனராகத் துவக்கி வைத்தார். அது நடந்த வருடம் 1976.

                        எனது முதற் படத்தின் இசையமைப்பாளராக எனது நண்பர் இளையராஜாவைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று 
ஆசைப்பட்டவன் நான். கன்னட கோகிலாவைத் தொடர்ந்து நான் இயக்கிய இரண்டாவது படம் " அழியாத கோலங்கள் ". தமிழ்ப்படம்.
இந்தப் படத்திற்கும் சலீல் சௌத்ரியே இசை அமைத்தார். அவர் வேண்டுகோளை என்னால் தட்டமுடியவில்லை. 78-ல் நான் இயக்கிய 
எனது மூன்றாவது படம் " மூடுபனி ". இந்தப் படத்திற்குத்தான் நான் இளையராஜாவை வைத்துக் கொள்ள முடிந்தது. மூடுபனி எனக்கு 
மூன்றாவது படம். இளையராஜாவுக்கு அது நூறாவது படம். இளையராஜா அத்தனை வேகமாகப் போய்க்கொண்டிருந்தார். 
            
                            மூடுபனியில் தொடங்கி 2005-ல் வெளிவந்த "அது ஒரு கனாக்காலம்" வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர். 

                         நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் "தலைமுறைகள்" 
என்று (தற்காலிகமாக) பெயரிடப்பட்டிருக்கும் எனது 22-வது படத்திற்கும் இளையராஜாதான் இசை. இதை நான் இன்னும் ராஜாவிடம் சொல்லவில்லை.
படத்தை முடித்து அவருக்குப் போட்டுக் காண்பித்தபின் சொல்லலாமென்றிருக்கிறேன்.

                             78-ல் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை தொடர்கிறது...
                             34 இனிய வருடங்கள் ! இனியும் அப்படித்தான்.

                இன்னும் ஐந்தாறு படங்களாவது செய்துவிட்டுப் போகவேண்டும் என்பது என் எண்ணம். கண்டிப்பாகச் செய்வேன்.அவை எல்லாவற்றிற்கும் இசை எனது ராஜா தான். அதில் மாற்றம் கிடையாது.

Friday 7 September 2012

சினிமாவும் நானும்....


7 SEPT 2012
வெள்ளி

             13 வயதில் தொடங்கிய எனது படிக்கும் பழக்கம், 16 வயதுக்குள் என்னை ஒரு வெறிகொண்ட வாசகனாக மாற்றியிருந்தது. தமிழில்
ராஜம் ஐயரின் "கமலாம்பாள் சரிதம்" முதல் அந்தக் கால கட்டத்தில் வெளிவந்திருந்த அத்தனை நாவல்களையும் படித்துமுடித்திருந்தேன்.
எங்களூர் வாசகசாலையிலும் எனது உயர் நிலைப்பள்ளி லைபரேரியிலும் இருந்த அனைத்து ஆங்கில நாவல்களையும் கரைத்துக் குடித்திருந்தேன்.
அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடம். இயேசு சபைப் பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்தது. எங்கள் வகுப்பு ஆசிரியராக ஃபாதர் லோரியோ. அமெரிக்கர். மசேச்சுசேட்ஸ் மாகணத்தைச் சேர்ந்த பொஸ்டனைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.பயங்கர சினிமாப் பைத்தியம். சொந்தமாக ஒரு சினிமாப் புரஜெக்டர் வைத்திருந்தார். நன்றாகத் தமிழ் பேசுவார். A.R. ரஹ்மான் பாடல்களைப் போல, ஆங்கில நெடி கலந்த தமிழ்.

         தனது 16 mm புரஜெக்டரில் ஒவ்வொரு வெள்ளியன்றும் எங்களுக்கு சினிமா காண்பிப்பார். அப்பொழுது பார்த்தவைதான்  'Lushiyana story', 'The Glass',
'The Post' , ' Bicycle Thieves', 'Battleship potemkin' போன்ற படங்கள்.

        எங்கள் ஆறாம் வகுப்புக் கும்பல், ஏழு, எட்டு என்று மேலே போகப் போக ஃபாதர் லோரியோவும் எங்களுடன் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் வரை அவரே எங்கள் கிளாஸ் டீச்சர். அதுகாரணம் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை உலக சினிமா பார்ப்பது
தொடர்ந்தது.கூடவே ஃபாதர் லோரியோவின் சினிமாப் பைத்தியம் எனக்கும் தொற்றிக் கொண்டது. வருடங்கள் உருள உருள என்னுள்ளே மொட்டாக
முளைத்த அந்த சினிமாப் பைத்தியம் பூவாகி, காயாகி, கனியாகி, விதையாகி, விழுந்து முளைத்த செடியாகி, விரிந்து படர்ந்த விருட்சமாகி
விட்டிருந்தது.

         இதற்கிடையில் ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. ஆறாம் வகுப்பின் தொடக்கத்தில் ஃபாதர் லோரியோ எங்களை ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துப்
போயிருந்தார். பள்ளிக்கூடப் பேருந்தில் ஃபாதர் லோரியோவுடன் நான்கு நாட்கள் ஊர் சுற்றியதை மறக்க முடியாது. ஸ்கூல் பஸ்ஸில் கை தட்டிப்
பாட்டுப் பாடி கும்மாளம் போட்டுக் குதூகலிக்கும் நேரம் போக, சற்று ஓய்வான தருணங்களில் பள்ளிக்கூடத்தில் அவர் காண்பித்த சினிமாக்களைப்
பற்றி ஃபாதர் லோரியோவுடன் அரட்டையடிப்பது எனக்கு வழக்கமாயிருந்தது. சினிமா பற்றிய எனது ஆர்வம் அவருக்குப் பிடித்திருந்தது. எனது
தொடர் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லுவார்.

          அன்று கண்டி என்ற ஊரில் முகாமிட்டிருந்தோம். கொழும்பிலிருந்து அறுபது மைல் தொலைவில் இருந்த அந்த மலை நகரம் பௌத்த மதத்தினரின்
புனிதத் தலங்களில் ஒன்று.
   
          நாங்கள் போன சமயம் அங்கு ஆங்கிலப் படமொன்றிற்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. கேள்விப்பட்டதும் ஃபாதர் லோரியோ குஷியாகிவிட்டார்.அடுத்த நாள் காலை எங்கள் இருபது பேரையும் அழைத்துக்கொண்டு அந்தப் படப் பிடிப்பு நடக்கும் இடத்திற்குப் போயிருந்தார்.

        அங்கு ஏகப்பட்ட வெள்ளைக்காரர்கள். இடையிலே ஒன்றிரண்டு நம் ஆட்கள். எல்லோரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
அனைவரையும் அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தவர் ஒரு வெள்ளைக்காரர். அரைக் காற்சட்டை, கையில்லாத பனியன், கேன்வாஸ்
ஷூஸ் என்று படு கம்பீரமாக இருந்தார். அவ்வப்போது அவர் அருகே வந்து ஆளாளுக்கு ஏதோ கேட்டுப் போனார்கள். எல்லோரும் அவரை
டேவிட் என்று பெயர் சொல்லி அழைத்தார்கள். அந்தப் படப்பிடிப்புக் குழுவின் தலைவர் அவர்தான் என்றும் அவர் பெயர் டேவிட் என்றும்
என் மனதில் எழுதிக் கொண்டேன்.

         பின்னாளில் தான் தெரிந்தது - "டேவிட்" என்று அழைக்கப்பட்ட அந்த மனிதர்தான் "டாக்டர் ஷிவாகோ", "லாரன்ஸ் ஆஃப் அரேபியா",
"ரையன்ஸ் டாட்டர்", போன்ற திரைக் காவியங்களை இயக்கிய இங்கிலாந்து இயக்குனர் டேவிட் லீன் என்று! நாம் பார்க்கப்போயிருந்த
படப்பிடிப்பு "Bridge on the River Kwai" என்ற அவரது படத்திற்கானது என்றும் தெரிந்தது.

          டேவிட் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி மூன்று கால்களைக் கொண்ட ஒரு தினுசான ஸ்டாண்டில் எதோ ஒன்று..
கருப்புத் துனியால் மூடப்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே நின்று கொண்டிருந்த இன்னுமொரு  வெள்ளைக்காரர்
மூடியிருந்த கறுப்புத் துணியை நீக்க, உள்ளே நான் அது வரை பார்த்திராத ஒரு கருவி. அது தான் "மோஷன் பிக்சர் கெமரா" என்று ஃபாதர்
லோரியோ எங்களுக்குத் தெரியப்படுத்தினார். எனது உடம்பு பூராவும் ஜிவ்வென்று ஏதோ ஒரு உணர்வு. அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும்
போல் இருந்தது. கை குறுகுறுத்தது. மனசு ஏங்கியது. அசாத்தியமான ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எனது ஆசையை ஃபாதர்
லோரியோவிடம் தெரிவித்தேன்.

" அவரைக் கேள் " என்று டேவிட்டை சுட்டிக் காட்டினார்.

         நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். எல்லோரையும் விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்த அந்த வெள்ளைக்காரரிடம் பேசக்
கூச்சமாக - இல்லை - பயமாக இருந்தது.

         எனது பயத்தைப் புரிந்து கொண்ட ஃபாதர் லோரியோ என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு டேவிட் அருகே போகிறார். தன்னை
அறிமுகம் செய்து கைகுலுக்கியபின் அவர் காதருகே ஏதோ பேசுகிறார். முடிவில் sure! why not..! என்ற டேவிட்டின் கம்பீரமான குரல் மட்டும்
எனக்குக் கேட்கிறது. ஃபாதர் லோரியோ என்னைப் பார்த்து " போ போய் தொட்டுப் பார் " என்று சிரித்தபடி சைகை காண்பிக்கிறார்.

        கெமிரா அருகே செல்கிறேன். அதன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த வெள்ளைக்காரருக்கு என் விருப்பம் தெரிவிக்கப்படுகிறது. அவர் சற்று
விலகிக் கொள்ள அந்தப் பெரிய கெமிராவை நான் தொட்டுத் தடவிப் பார்க்கிறேன். தொட்ட மாத்திரத்தில் என் உடல் பூராவும் ஒரு தடவை
உதறிப் போடுகிறது.

        எங்கள் வீட்டு வாழைத் தோட்டத்தின் மறைவில், என் பிரியப்பட்ட பால்ய சினேகிதி அன்னலட்சுமியின் இள மார்பகங்களைத் தொட்டு
தடவிப்பார்த்த பொழுதும், பின்னொரு நாள் அதே வாழைத் தோட்ட மறைவில், அவளைப் படுக்கவைத்து, பாவாடை உயர்த்தி அவள் பிறப்புறுப்பைத் தொட்டுத் தடவிய பொழுதும் என் உடம்பில் ஏற்பட்ட அதே உதறல் - அதே புல்லரிப்பு...

        காலையில் படப்பிடிப்புக்குச் சென்று, கறுப்புத் துணி நீக்கி, முதல் முதலாக எனது கெமராவைத் தொடும்பொழுது அந்த உடல் உதறலும் புல்லரிப்பும் இப்பொழுது கூடத் தொடர்கிறது.

         படப்பிடிப்பு பார்ப்பதற்கென்று நாங்கள் போயிருந்த நாள் ஒரு சாதாரண நாள். மேக மூட்டம் கூடக் கிடையாது.அதுவரை கசமுச என்று பேசிக்
கொண்டும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டுமிருந்த படப்பிடிப்புக் குழுவினர் அமைதியாகிறார்கள். நிசப்தம். Total silence...! அந்த இடத்திற்கான
குருவிச் சத்தங்களைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை. அதைப் பார்த்து நாங்களும் மௌனமாகிறோம். சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த
டேவிட் கெமிரா அருகே நின்றுகொண்டிருந்த அந்த வெள்ளைக்காரரைப் பார்த்து ஏதோ சைகை செய்கிறார்.

         கெமிரா அருகே நின்றுகொண்டிருந்த வெள்ளைக்காரர் கெமிராவை on செய்கிறார்... Rolling.... என்று குரல் கொடுக்கிறார்.. டேவிட் ஒரு வினாடி
தாமதித்து உரத்த சத்தத்தில் - மிக உரத்த சத்தத்தில் " RAIN " ! என்று கத்துகிறார்... அந்தக் காட்டுக் கத்தல் என்னைத் திடுக்கிட வைக்கிறது...

         டேவிட் " RAIN " என்று கத்தியதும், மழை கொட்டுகிறது. பெரிய மழை..... ஆச்சரியத்தில் நான் உறைந்து போகிறேன். RAIN என்று கத்தியதுமே மழை பெய்கிறதென்றால், இந்த டேவிட் என்ற மனிதரிடம் எதோ கடவுள்தன்மை இருக்க வேண்டும்...!

         ஆறாம் கிளாஸ் படிக்கும் போது கண்டியில் பார்த்த அந்தப் படப்பிடிப்பை, அந்த மழைக்காட்சியைப் பத்தாம் கிளாஸ் படிக்கும்போது எங்களூர் தியேட்டருக்கு வந்த BRIDGE ON THE RIVER KWAI என்ற ஆங்கிலப் படத்தில் பார்த்த போது எனக்குள்ளே ஒரு எண்ணம் வலுத்தது.

         பெரியவனானதும் நான் சினிமா டைரக்டராகத்தான் வருவேன்...
 " RAIN " என்று நான் கத்தினால் மழை பெய்யும்.....!  



பாலுமகேந்திரா பேசுகிறேன்....


7- SEPT- 2012

நண்பர்களே...

            என்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும்
மற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

           சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும்    சாதனையாளனல்ல. நான் ஒரு சாமன்யன். இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை. இந்த இடத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். லட்சுமி அமர்ந்திருப்பதாக சொல்லப்படும் செந்தாமரையும்
சரஸ்வதி வீற்றிருப்பதாக சொல்லப்படும் வெண்தாமரையும் சேற்றில் தானே மலர்கின்றன.பாலுமகேந்திரா என்ற சேற்றில் இருந்து தான் கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, ஜூலி கணபதி,  அது ஒரு கனாக்காலம், போன்ற செந்தாமரைகளும், வீடு, சந்தியா ராகம், போன்ற வெண்தாமரைகளும் மலர்ந்தன.

        எனது வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படியானதோ அல்லது எழுதிக் கொள்ளும்படியானதோ அல்ல...
 
        நான் வணங்கும் பிரபஞ்ச சக்தி, சினிமா என்னும் மிகப் பெரிய ஆற்றலை எனக்குத் தந்துள்ளது. என்னிடமிருந்து சினிமாவைப் பிரித்துவிட்டால்,
எஞ்சுவது பூஜ்யம் என்பது எனக்குத் தெரியும். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். எனது வாழ்க்கையை நான் பதிவு செய்வதாக
இருந்தால், அதில் நடந்த நல்லது கெட்டது எல்லாவற்றையும் நான் எழுதவேண்டும். அப்படி எழுத முற்படும் பொழுது, எனது வாழ்க்கையோடு நேரடியாக சம்பந்தப்பட்ட சிலருக்கு அது வேண்டாத ஒரு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும்.எனவே எனது வாழ்க்கையில் நடந்த பல முக்கியமான சம்பவங்களையும், உறவுகளையும் நான் தவிர்க்க வேண்டி வரும்.
அவையெல்லாம் இல்லாத எனது சுயசரிதை, குறைபட்ட சுயசரிதையாகவே இருக்கும்.
     
         இருப்பினும், எழுத்தில் பதிவு செய்யப் படவேண்டிய எனது வாழ்க்கையின் அத்தியாயங்களை- குறிப்பாக சினிமாவுக்கும் எனக்குமான உறவை
- இலக்கியத்திற்கும் எனக்குமான உறவை நான் சொல்லியாகவேண்டும்....
  அவ்வப்போது அவைபற்றி எழுதலாமென்றிருக்கிறேன்...


  தோழமையுடன்,

   பாலுமகேந்திரா.