Pages

Wednesday 12 September 2012

இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -1


12- sept- 2012
புதன்                

                  எழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் 
பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்குப் படவாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். ராஜாஜி அவர்களின்
கதையான "திக்கற்ற பார்வதியை" தமிழில் படமாக எடுத்துத் தேசிய விருது பெற்றவர்.
  
                    திக்கற்ற பார்வதியைத் தொடர்ந்து " தரம்மாறிந்தி " என்ற தெலுங்குப் படத்தை இயக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தை
நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஒத்துக்கொண்டேன். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளர் தான் அந்தப் படத்திற்கு இசை. ஜி.கே. வெங்கடேஷ் எம்.எஸ்.வி யுடன் பணியாற்றியவர். நல்ல இசை ஞானம் உள்ளவர்.அந்தப் படத்திற்கான மியூசிக் கம்போசிங் மாம்பலத்திலிருந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும். இசையமைப்பளர் ஜி.கே.வெங்கடேசுடன்,கம்போசிங் உதவியாளராக தேனியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூடவே வருவான். கிட்டார் கொண்டு வருவான். அவன் பெயர் இளையராஜா.

                              நான் ஒளிப்பதிவு செய்யும் படங்களின் மியூசிக் கம்போசிங், டான்ஸ் ரிகர்ஸல் மற்றும் எடிட்டிங் போன்றவைகளுக்கெல்லாம்
நான் போய் உட்காருவது வழக்கம். அந்தத் தெலுங்குப் படத்தின் மியூசிக் கம்போசிங்கின் போதுதான் இளையராஜாவுக்கும் எனக்கும் நட்பு 
ஏற்பட்டது. நான் பூனே திரைப்படப் பள்ளியில் பயின்று தங்கப் பதக்கம் வென்றவன் என்பதாலோ, அல்லது எனது ஒளிப்பதிவின் நேர்த்தியால் கவரப்பட்டதாலோ,இளையராஜா சினிமாவைப் பற்றியும், ஒளிப்பதிவின் நுட்பங்கள் பற்றியும் என்னிடம் நிறையப் பேசுவார். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நிறையப் பேசுவோம். நேரம் போவது தெரியாமல் பேசுவோம். 

                       என்றோ ஒருநாள், தான் இசையமைக்கப் போகும் தனது முதல் படத்திற்கென்று அவர் போட்டுவைத்திருந்த மெட்டுகளை எனக்குப் பாடிக் காண்பிப்பார். சில வருடங்கள் கழித்து அவர் இசையமைத்த முதற் படமான அன்னக்கிளியின் மெட்டுக்கள் சில அவர் எனக்குப் பாடிக்காண்பித்தவைதான். இளையராஜா என்ற அந்தக் கிராமத்து இளைஞரின் அசாத்தியமான திறன் என்னை அதிர வைத்தது.

                           நான் இயக்கும் முதல் படத்திற்கு இளையராஜாவைத்தான் இசையமைப்பாளராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தேன். 
            
                          எனது எண்ணத்தை ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் தெரியப்படுத்தவும் செய்தேன். அது கேட்ட ஜி.கே.வெங்கடேஷ்
சொன்ன தீர்க்கதரிசன வார்த்தைகள் எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கின்றன.. 
            " பாலு. இந்தப் பயலுக்கு மட்டும் நீங்க ஒரு சான்ஸ் குடுத்தீங்க... அம்புட்டுத்தான், எல்லாரையும் தூக்கி ஓரங்கட்டிடுவான். "

                    அப்படியே தான் நடந்தது. ஆனால் சான்ஸ் கொடுத்தது நானல்ல. பஞ்சு அருணாச்சலம் என்ற தயாரிப்பாளர். அவர் தயாரிப்பில் 
வந்த "அன்னக்கிளி" படத்தின் மூலம் இளையராஜா என்ற மேதையை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 

                  அன்னக்கிளி படமும், அதற்கான இளையராஜாவின் இசையும் மிகப் பெரிய வெற்றியீட்டின. அன்னக்கிளி படத்திற்குப் பின்
ராஜாவுக்கு உட்கார நேரமில்லாது தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார். வெற்றி மேல் வெற்றி. தங்களுடைய மண்ணின் இசையை, 
தமிழர்கள் இளையராஜா என்ற இந்தக் கிராமத்து இளைஞன் மூலம் தெரிந்து கொண்டார்கள். ராஜாவின் இசை, தமிழர்களின் இசை. தமிழ் 
மண்ணின் இசை. தமிழ்க் கிராமங்களின் மண்வாசனையோடும், அந்த மக்களின் வியர்வை வாசனையோடும் கலந்து வந்த இசை.

                         பூனே திரைப்படக் கல்லூரியில் எனது படிப்பை முடித்து தங்கப் பதக்கம் வென்று நான் வெளிவந்த வருடம் 1969.செம்மீன் புகழ் ராமு கரியாத், செம்மீனை அடுத்து இயக்கிய நெல்லு என்ற மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராக என்னை அறிமுகப்படுத்துகிறார்.வருடம் 1971. 

                           நெல்லு படத்தின் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி. செம்மீன் படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார். இந்தியத் திரையிசையின்
மகா மேதைகளில் ஒருவர் சலீல் சொத்ரி. நெல்லு படத்தின் ஒளிப்பதிவைப் பார்த்து பிரமித்துப் போன அவர் என் மீது மிகவும் பிரியமாக 
இருந்தார். அந்தப் பிரியத்தின் வெளிப்பாடாக அவர் ஒரு நாள் என்னிடம் சொன்னார். " பாலு நீ இயக்கும் முதல் படத்திற்கு நான் தான் இசையமைப்பேன்".இந்திய இசைவானில் தன்னிகரற்ற தனி நட்சத்திரமாகத் திகழ்ந்த அந்த மகா வித்வானின் அன்புக் கட்டளை அது. அவர் விரும்பியபடியே,எனது முதற் படமான "கோகிலா"வுக்கு அவரே இசையமைத்து என்னை ஒரு இயக்குனராகத் துவக்கி வைத்தார். அது நடந்த வருடம் 1976.

                        எனது முதற் படத்தின் இசையமைப்பாளராக எனது நண்பர் இளையராஜாவைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று 
ஆசைப்பட்டவன் நான். கன்னட கோகிலாவைத் தொடர்ந்து நான் இயக்கிய இரண்டாவது படம் " அழியாத கோலங்கள் ". தமிழ்ப்படம்.
இந்தப் படத்திற்கும் சலீல் சௌத்ரியே இசை அமைத்தார். அவர் வேண்டுகோளை என்னால் தட்டமுடியவில்லை. 78-ல் நான் இயக்கிய 
எனது மூன்றாவது படம் " மூடுபனி ". இந்தப் படத்திற்குத்தான் நான் இளையராஜாவை வைத்துக் கொள்ள முடிந்தது. மூடுபனி எனக்கு 
மூன்றாவது படம். இளையராஜாவுக்கு அது நூறாவது படம். இளையராஜா அத்தனை வேகமாகப் போய்க்கொண்டிருந்தார். 
            
                            மூடுபனியில் தொடங்கி 2005-ல் வெளிவந்த "அது ஒரு கனாக்காலம்" வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர். 

                         நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் "தலைமுறைகள்" 
என்று (தற்காலிகமாக) பெயரிடப்பட்டிருக்கும் எனது 22-வது படத்திற்கும் இளையராஜாதான் இசை. இதை நான் இன்னும் ராஜாவிடம் சொல்லவில்லை.
படத்தை முடித்து அவருக்குப் போட்டுக் காண்பித்தபின் சொல்லலாமென்றிருக்கிறேன்.

                             78-ல் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை தொடர்கிறது...
                             34 இனிய வருடங்கள் ! இனியும் அப்படித்தான்.

                இன்னும் ஐந்தாறு படங்களாவது செய்துவிட்டுப் போகவேண்டும் என்பது என் எண்ணம். கண்டிப்பாகச் செய்வேன்.அவை எல்லாவற்றிற்கும் இசை எனது ராஜா தான். அதில் மாற்றம் கிடையாது.