7- SEPT- 2012
நண்பர்களே...
என்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும்
மற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும் சாதனையாளனல்ல. நான் ஒரு சாமன்யன். இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை. இந்த இடத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். லட்சுமி அமர்ந்திருப்பதாக சொல்லப்படும் செந்தாமரையும்
சரஸ்வதி வீற்றிருப்பதாக சொல்லப்படும் வெண்தாமரையும் சேற்றில் தானே மலர்கின்றன.பாலுமகேந்திரா என்ற சேற்றில் இருந்து தான் கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம், போன்ற செந்தாமரைகளும், வீடு, சந்தியா ராகம், போன்ற வெண்தாமரைகளும் மலர்ந்தன.
எனது வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படியானதோ அல்லது எழுதிக் கொள்ளும்படியானதோ அல்ல...
நான் வணங்கும் பிரபஞ்ச சக்தி, சினிமா என்னும் மிகப் பெரிய ஆற்றலை எனக்குத் தந்துள்ளது. என்னிடமிருந்து சினிமாவைப் பிரித்துவிட்டால்,
எஞ்சுவது பூஜ்யம் என்பது எனக்குத் தெரியும். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். எனது வாழ்க்கையை நான் பதிவு செய்வதாக
இருந்தால், அதில் நடந்த நல்லது கெட்டது எல்லாவற்றையும் நான் எழுதவேண்டும். அப்படி எழுத முற்படும் பொழுது, எனது வாழ்க்கையோடு நேரடியாக சம்பந்தப்பட்ட சிலருக்கு அது வேண்டாத ஒரு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும்.எனவே எனது வாழ்க்கையில் நடந்த பல முக்கியமான சம்பவங்களையும், உறவுகளையும் நான் தவிர்க்க வேண்டி வரும்.
அவையெல்லாம் இல்லாத எனது சுயசரிதை, குறைபட்ட சுயசரிதையாகவே இருக்கும்.
இருப்பினும், எழுத்தில் பதிவு செய்யப் படவேண்டிய எனது வாழ்க்கையின் அத்தியாயங்களை- குறிப்பாக சினிமாவுக்கும் எனக்குமான உறவை
- இலக்கியத்திற்கும் எனக்குமான உறவை நான் சொல்லியாகவேண்டும்....
அவ்வப்போது அவைபற்றி எழுதலாமென்றிருக்கிறேன்...
தோழமையுடன்,
பாலுமகேந்திரா.